60 வருடத்தில் பல முறை பிறந்தவர்!

அவருக்கு அண்மையில் 60 வயது  (10.11.2017)ிறந்துவிட்டது.

பிடல் காஸ்ரோவுக்கு அடுத்து நான் அறிந்தமட்டில், அதிக கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பவர் அவர்.

தொடர்ச்சியான அச்சுறுத்தலிலிருந்து தப்பி அறுபது வயதை அடைந்திருப்பது மிகவும் பெரிய சாதனைதான். நீரில் கண்டம் நிலத்தில் கண்டம் என சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன். ஆனால், பாக்குநீரிணை, வெலிக்கடை, களுத்துறை என அடுத்தடுத்து கண்டங்களிலிருந்து தப்பி வந்தவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதமுடியும்.

அவர்தான் டக்ளஸ் தேவானந்தா.

அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் என்பதனால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறுகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சாதாரண மிருகவைத்தியனாக தமிழ்நாட்டுக்குச் சென்று வாழத்தலைப்பட்ட என்னை, கையில் பிடித்து தமிழர் நல மருத்துவநிலையத்தை நடத்தும்படி முன்தள்ளியவர்.

புதிய வாழ்விடத்தில் தயங்கியபடி சென்ற எனக்கு முன்னால் தெரிந்த அந்தப்பாதையிலிருந்து பின்வாங்கமுடியாது போய்விட்டது. மருத்துவநிலைய பணியுடன் ஏனைய தமிழ் இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், தமிழ்நாட்டு அரசியவாதிகள் மாத்திரமின்றி அகில இந்திய அரசியல்வாதிகளும் எனக்கு அறிமுகமாகினர். அதனால் இலங்கைத்தமிழ் அரசியலில் மூழ்கவேண்டியதாகியது .

இந்தியாவை விட்டு வந்தபின்பும் அவுஸ்திரேலியாவில் பத்திரிகை நடத்தி, சமூக அரசியலில் ஈடுபாடு கொண்டதால் பேனையை எடுத்து எழுதத்தொடங்கினேன். என்னையும் ஒரு எழுத்தாளனாக கருதி பலரும் என்னை திரும்பிப் பார்க்கிறார்கள்.

இப்படியாக உருமாற்றம் அடைந்து நான் நானாகினேன். இந்த மாற்றம் உருவாவதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர் அந்த நண்பர்தான்.

விடுதலைப்புலிகள் கோலோச்சிய காலத்தில் அவர்களை எதிர்த்தவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். பிரபாகரன் தனது குடும்பத்தையோ, அல்லது ஈழப்போராட்டத்தைப் பற்றியோ சிந்தித்த காலத்தைவிட பல மடங்கு இந்த நண்பரைப்பற்றியே சிந்தித்திருப்பார்.

பொட்டு அம்மான் கனவிலும் நினைவிலும் எவ்வளவு காலம் ஓவர்ரைம் செய்திருப்பார்? கரும்புலிகள், கழுதைப்புலிகளெல்லாவற்றையும் தோற்கவைத்து தற்போது 60 வயதை எய்தியது இமாலய சாதனை என்பேன்.

போராளிகளாக இருந்தவர்களில் மூவரை நான் துணிவானவர்கள் என நினைத்திருந்தேன். விடுதலைப்புலிகளில் மாத்தையா ரெலோவில் தாஸ் மற்றவர் இந்த நண்பர். 84-85 காலகட்டத்தில் எனக்கிருந்த கணிப்பு இன்னமும் மாறவில்லை.

யாழ்ப்பாணம் பழைய சிறீதர் தியேட்டருக்குள் செல்லும்போது ஒரு சிங்கத்தின குகையினுள் பிரவேசிக்கும் உணர்வு வந்தாலும், அங்கு தரப்படும் உபசரிப்பும் உணவும், தேநீரும் , அவற்றுடன் அவரிடமிருந்து வரும் தோழர் என்ற வார்த்தையும் சர்க்கரையாக இனிக்கும்.

எங்கள் உதயம் பத்திரிகையில் ஒரு முறை அவரை விமர்சித்தமையால், தொலைபேசியில் தொடர்புகொண்டு சுமார் அரைமணிநேரம் தனது தரப்பில் விளக்கம் சொன்னார். இப்படி எத்தனை அரசியல்வாதிகள் சொல்வார்கள் ? அவருடனான நேரடி சந்திப்பிலும் அவரை பல முறை விமர்சித்துள்ளேன். ஆனாலும் அதற்கப்பாலும் அவரிடத்தில் மனிதத்தைக் காணமுடிந்தது

மதுப்பழக்கம், புகைத்தல் உட்பட எந்தவொரு தீயபழக்கங்களுமற்றவராக அதிகாலையிலேயே எழுந்து கடமைகளைச்செய்யும் மிகவும் வித்தியாசமான மனிதர் அவர். அத்துடன் வேகமாக செயல்படும் தன்மையும் அவரது இயல்பு. இப்படியான தன்மைகளுடன் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்கள் எமது சமூகத்தில் அரிது.

போர் முடிந்தகாலத்தில் இலங்கையில் அவரை பல தடவை சந்தித்துபேசியுள்ளேன். ஒரு பேராசையுடன் எமது தாயகத்தின் முழுத் தமிழர்களின் தலைவராக உருவாகக்கூடிய சந்தர்பத்தை பாவிக்கச் சொல்லி வலியுறுத்தினேன்.

அது நடக்காதபோதிலும், இதுவரையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடகிழக்கில் அவரைத்தவிர அத்தகைய பாத்திரத்தை அடையத்தக்க வேறு எவரும் கிடைக்கவில்லை என்பது உண்மை.

எட்ட இருந்துபார்த்தால் எதுவும் தெரியாது. அருகில் சென்று பழகியதனால்தான் இந்தப்பதிவை அவரது 60 ஆவது அகவையில் எழுதுகின்றேன்.

வடக்கில் நடந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில் எப்படியாவது அவரை தோற்கடித்துவிடவேண்டும் என்றுதான் அவருக்கு எதிரான அணியினர் கங்கணம் கட்டி களம் இறங்கினார்கள். யாழ் மக்களின் அபிமானம் அவருக்கிருந்தது.

அவரைவிமர்சித்த புலிகள் அமைப்பின் ஆஸ்தான கவிஞர் புதுவை ரத்தினதுரை இறுதிக்கட்ட போரின்போது காணாமல்போய்விட்டார். கணவரும் சரணடைந்ததாகத்தான் அவரது மனைவி சொன்னார்.புதுவை ரத்தினதுரையின் அக்காவும் மைச்சானும் அவரைத்தேடிச்சென்று முறையிட்டனர். வந்தவர்களைத் தேற்றி வாசல்வரையில் வந்து வழியனுப்பிவைத்தார். அவரைக்கொல்வதற்கு முயன்றவர்களுக்கு எதிராக நீதிமன்றம் வழக்குத்தாக்கல் செய்தபோது அந்த எதிரிகளை மன்னித்து விடுதலைசெய்யச்சொன்னார்.

எனக்குத்தெரிந்த நண்பர் சொன்னசெய்தி சற்றுவித்தியாசமானது.

அந்த நண்பரின் மனைவியின் உறவினர் ஒருவர் கொழும்பில் இறந்துவிட்டார். அவ்வேளையில் கொழும்பில் பதட்டம் நிலவியது. அவருக்கும் அந்தநண்பர் நன்கு தெரிந்தவர்.கொழும்பில் நடக்கும் மரணச்சடங்கு பற்றி அவருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால், இது அந்த நண்பரின் மனைவிக்குத்தெரியாது.
உடனே கொழும்புக்கு மரணச்சடங்கிற்கு வந்த அந்தப்பெண்மணிக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார். இத்தகைய அருங்குணங்களும் அவருக்குண்டு.

பாக்கு நீரிணையில் நீந்தித்தப்பி இந்தியக்கரையில் சேர்ந்தபோது, அவரைக்கண்ட தோழர்கள், ” எப்படியோ தப்பிப்பிழைத்து கரைசேர்ந்துவிட்டீர்கள்” என்றவுடன், ” மகிழ்ச்சியுடனா அல்லது துக்கத்துடனா சொல்கிறீர்கள்” என்று திருப்பிக்கேட்டவர் அவர்.
இத்தகைய குசும்புக்குணங்களும் அவரிடத்தில் நிறையவுண்டு.

அவருக்கு 60 வயது என்ற நினைவு வந்தவுடன் வாழ்த்தினை குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தேன். அவ்வேளையில் இலங்கையில் அதிகாலை 4 மணியிருக்கும். அச்செய்தி கண்ட மறுகணம் நன்றி தெரிவித்து பதிலும் வந்தது.
அத்தகைய ஒரு விடிகாலைப்பறவை (Early Bird ) அவர்

அவர் மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றேன்.

noelnadesan

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...