தமிழர்களை வைத்து அமெரிக்கா கபட நாடகம்;

அமெரிக்கா தமிழ் மக்களை வைத்து கபட நாடகமாடுவதாக லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளதுடன், நல்லாட்சியில் அமெரிக்கா தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக் கொடுத்ததாவெனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவிக்கையில்;

நாடு தற்போது அபாயகரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டு வருகின்றது. திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்கு வழங்க அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் 7ஆவது யுத்தக் கப்பல் திருமலைக்கு விரைவில் வரவுள்ளது.

அம்பாந்தோட்டையை சீனாவக்கு வழங்கியுள்ள நிலையில்,  இந்தியாவுடனும் அரசாங்கம் நாட்டின் வளங்களை  வழங்க ஒப்பந்தம் செய்யவுள்ளது. இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

மகிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டையை  32 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கிய நிலையில் நல்லாட்சி அரசு 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு அதனை வழங்கியுள்ளது. நாட்டின் வளங்களை வெளியாருக்கு விற்கமாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்,  நாட்டு வளங்களை பகுதி பகுதியாக விற்கின்றனர்.

அன்று மகிந்தவை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விமர்சித்தன. ஐ.நா. வில் யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு அநியாயம் நடந்தாக கூறியது. தற்போதைய ஆட்சி குறித்து அமெரிக்கா வாய்திறக்காதுள்ளது.

இதற்குக் காரணம், அமெரிக்காவின் நோக்கம்  நிறைவேறி வருவதேயாகும். அமெரிக்காவின்  நீண்டகால இலக்கான திருமலை அதற்குக் கிடைத்துவிட்டது. இன்று தமிழ் மக்களுக்காக அமெரிக்கா குரல் கொடுக்காதுள்ளது.

தமக்கு வேண்டியதைச் செய்து கொள்ள அமெரிக்கா தமிழ் மக்களை வைத்து நாடகமாடியுள்ளது. இதனை புலம்பெயர்ந்தவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவால் இந்த  ஆட்சியில் தமிழ் மக்களுக்கு  தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடிந்ததா எனவும் தெரிவித்துள்ளார்.

ரொஷான் நாகலிங்கம்

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...