ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் 12,000 புலிகளும் கைதாகும் நிலை!

முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டில்  நடவடிக்கை எடுக்கப்படுமாயிருந்தால், புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ள 12 ஆயிரம் முன்னாள் புலிகளையும் கைது செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இராணுவத் தளபதியாக இருந்த ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தற்போது போர்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அன்று யுத்தம் மேற்கொண்டிருக்காவிட்டால், இன்று நாட்டில் சமாதானம் ஏற்பட்டிருக்காது. அப்போதெல்லாம் வருடத்துக்கு மூவாயிரம் உயிர்கள் பலியாகின.

தற்போது அந்நிலைமை இல்லை. அப்படிப் பார்த்தால் அவரால் சுமார் 25 ஆயிரம் உயிர்கள் போருக்குப் பின்னர் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, அச்சத்துடன் வாழும் சூழ்நிலையும் இல்லாமல்போயுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்திச் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டாலும் சர்வதேச ரீதியில் அவர்களின் செயற்பாடுகள்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ருத்ரகுமார் உள்ளிட்ட புலிகளின் தலைவர்கள் இன்னும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கின்றனர்.

இதனால் முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா
யி ருந்தால், புலிகளின்   தலைவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும். அத்துடன், மகிந்த காலத்தில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள 12,000 முன்னாள் விடுதலை புலிகளையும்  மீண்டும் கைது செய்ய வேண்டிய நிலைமையும்  ஏற்படலாம்.

இது நல்லிணக்கத்துக்கும் சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமே. இதனால்  இது தொடர்பாக சகல தரப்பினரும் சிந்தித்து நடந்துகொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...