அமெரிக்கா: ஜனநாயகத்தை கட்டவிழ்த்தல்!

ஜனநாயகம் என்றால் என்ன? என்ற வினாவுக்கான பொதுவான விடையேதும் இல்லை. இருந்தபோதும், அனைத்தினதும் அடிப்படையாக ஜனநாயகம் கருதப்படுகிறது.

ஜனநாயகத்தின் இருப்பிடமாகவும் அதன் காவலனாகவும் அமெரிக்கா முன்னிலைப்படுத்தப்படுகிறது. கெடுபிடிப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கு, ஜனநாயகம் என்றால் அமெரிக்கா; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்திருக்கிறது. கட்டமைப்புகள் கட்டவிழும் காலமதில் ஜனநாயகமும் விலக்கல்ல; அமெரிக்காவும் விலக்கல்ல.

கடந்தவாரம், அமெரிக்காவில் நடைபெற்றதொரு சம்பவம், கவனம் பெறாமல், சத்தமில்லாமல் கடந்து போயுள்ளது. அமெரிக்க வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகக் கவனம் பெற்றிருக்க வேண்டியவொன்று, திட்டமிட்டு, இருட்டடிப்புச் செய்யப்பட்டு, மறைக்கப்பட்டிருக்கிறது.

இது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைந்த ‘புதிய அமெரிக்காவை’ முன்மொழிகிறது. அமெரிக்காவில் நீக்கமற நிறைந்திருந்தபோதும், ஜனநாயக முகமூடியால் மூடி மறைக்கப்பட்டு வந்த நிறவெறியை, துவேசத்தைப் பொதுவெளிக்குக் கொணர்ந்து சேர்த்துள்ளது.

கடந்தவாரம், அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் சார்லட்வில்லில், சமத்துவத்தையும் சமூகநீதியையும் வேண்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, வெள்ளை நிறவெறிக் கும்பல் நிகழ்த்திய மூர்க்கத்தனமான தாக்குதல், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்சினையின் மையமாக இருப்பவர் ரோபேட் ஈ லீ. இவர், அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் தெற்கு மாநிலங்களின் சார்பாகப் போரிட்ட இராணுவ ஜெனரல் ஆவார்.

1861 முதல் 1865 வரை அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களிடையே உள்நாட்டு யுத்தம் நடந்தது. இதன் மையமாக இருந்தது அடிமைமுறையாகும். அதுவரை காலமும் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையை, 1860இல் தெரிவான அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நீக்க முனைந்தார்.

இதை எதிர்த்த தென்மாநிலங்கள், கூட்டாகப் பிரிந்து, தனிநாடாகத் தங்களை அறிவித்தன. இதுவே, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது. ஆபிரிக்காவிலிருந்து மக்களைத் தருவித்து, எதுவித சம்பளமோ உரிமைகளோ அற்று, அடிமைகளாக நடாத்துவதன் மூலமே, அமெரிக்கா வளர்ச்சியடைந்தது.

இதை நிறுத்துவதற்கு எதிராகவே, தென் மாநிலங்கள் போரிட்டன. தென்மாநிலங்களின் பிரதான தளபதி ரோபேட் ஈ லீ; போரில் தென்மாநிலங்கள் தோல்வியடைந்த போதும், ரோபேட் ஈ லீயின் மரணத்தின் பின், அவருக்கான சிலைகள் நிறுவப்பட்டன.

கி.பி 1600களின் மத்தியில், ஆபிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல, ஆபிரிக்க மக்கள், அமெரிக்காவுக்குப் பிடித்து வரப்பட்டார்கள். இதே காலத்தில்தான், மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள், கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு, நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல, பின்னர் வந்த இலத்தீன் அமெரிக்கர்களும் ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதே, நின்றுகொண்டிருந்தன.

இருபதாம் நூற்றாண்டில், கருப்பின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்துக்குப் பிறகு, குறிப்பாக, மார்ட்டின் லூதர் கிங் காலத்தில், 1960களில் நடந்த சிவில் உரிமை இயக்கத்தின் விளைவாக, அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் காலத்தில், நிறவெறிக் கொடுமைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. இதற்கு முன்னர், இவையனைத்தும் சட்டபூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

இப்போது, ரோபேட் ஈ லீயின் சிலைகள் அடிமைத்தனத்தினதும் வெள்ளை நிறவெறியினதும் சின்னமாக இருப்பதால், அவற்றை நீக்குவதற்குச் சில பொது நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. அதன் விளைவால், அவரது சில சிலைகள் நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தோமஸ் ஜெபர்சனால் வடிவமைக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்பட்ட 22,000 மாணவர்களைக் கொண்ட வேர்ஜினிய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள, ரோபேட் ஈ லீயின் சிலையை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவித்து, நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே வெள்ளை நிறவாதிகள், தங்கள் எதிர் ஆர்ப்பாட்டம் மூலம் வெறித்தனமான தாக்குதலை நிகழ்த்தினர்.

இதற்கு முன்தினம், வெள்ளை நிறவெறி ஆதரவாளர்கள் எல்லோரும், ‘நவநாஜிகள்’ எனக் கூட்டாக, தீபச்சுடர் அணிவகுப்பொன்றைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நடாத்தினர். இதில், நாஜிகளின் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவர்கள், ‘ஓரே தேசம்; ஒரே மக்கள்’, ‘குடியேற்றவாசிகளை வெளியேற்று’, ‘அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே’ போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இதன் அடுத்த கட்டமாக, மறுநாள் அமெரிக்காவின் பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும், நிறவெறிக்கு எதிராகவும் நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியின் மீது, எதிர் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் வன்முறை ஏவப்பட்டது.   அப்போது, அமைதிப் பேரணியின் மீது, காரைச்செலுத்திய, ‘நவநாஜி’யாகத் தன்னை அறிவித்துக் கொண்ட, 20 வயது இளைஞனொருவன், ஒருவரைக் கொலைசெய்ததோடு, 15க்கும் அதிகமானோரைக் காயமடையவும் செய்திருந்தான்.

இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து, பொலிஸார் திருப்பி அழைக்கப்பட்டனர். இதற்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து, நாஜிகளும் நிறவெறி ஆதரவாளர்களும் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். இது, திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு தாக்குதல் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது, ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் வெளியின் கருத்தமைவில், பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வன்செயல், அமெரிக்க அரசியலில் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இது, அமெரிக்காவில் வேரூன்றியுள்ள, இரு கட்சி அமைப்புகளுக்கு வெளியே, வெள்ளை நிறவெறியையும் பாசிசத்தன்மையையும் கொண்ட இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான, ட்ரம்ப்பினதும் அவர்களது சகாக்களினதும் திட்டத்தின் விளைவாகும்.

முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரித்துள்ள, சமூகப் பொருளாதார சமத்துவமின்மை, இதற்கான தளத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்க சமூக அடுக்குகளில், கீழ்நிலையில் உள்ளவர்கள், நூற்றாண்டு கால இருகட்சி ஜனநாயகத்தின் தோல்வியையும் அது ஏற்படுத்திய சேதங்களையும் உணர்கிறார்கள்.

இதன் விளைவால், இவற்றுக்கு மாற்றான ஒன்றுக்கான, வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியை, ட்ரம்ப் தனது ‘அமெரிக்கப் பெருமை’ப் பேச்சுகளால் நிரப்புகிறார்.

கடந்த சில வாரங்களாக, ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்களான ஸ்டீபன் பானன், ஸ்டீபன் மில்லர் மற்றும் செபஸ்தியன் கோர்க்கா ஆகியோர், தமது அரசியல் அடித்தளத்தின் மையமான பாசிசவாத கூறுபாடுகளிடையே, ஆதரவை அதிகரிக்கும் அந்நிர்வாகத்தின் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சார்லட்வில்லில் நடந்த சம்பங்கள், கடந்த சில மாதங்களாக, அமெரிக்கா எங்கும் நடக்கும் ‘வலதை ஐக்கியப்படுத்துவோம்’ பேரணிகளின் தொடர்ச்சியாகும். இது அமெரிக்காவெங்கும், நிறவெறியை மீள சமூகத்தில் விதைப்பதோடு, அதைப் பிரதான அரசியற்போக்காக மாற்ற முனைகிறது.

சார்லட்வில் சம்பவங்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கண்டனம் தெரிவிக்க மறுத்தார். மாறாக, அதிவலது போராட்டக்காரர்களை ‘மிக அருமையானவர்கள்’ என ட்ரம்ப் பாராட்டினார்.

இது, அவர் வேட்பாளராகப் போட்டியிட்ட காலத்துச் சிந்தனைகளோடு மிக ஒத்திருக்கிறது. ஆனால், ட்ரம்பின் இச்செயல், பல நாட்டுத் தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், “அது, பயங்கரமானது; அது, தீயது; அது, இனவாத, அதிவலது வன்முறையாகும். அது, உலகில் எங்கு நடந்தாலும், முழுப் பலத்துடன், தீர்மானகரமாகக் கையாளப்பட வேண்டும்” என்றார்.

சார்லட்வில் சம்பவங்களை,“கொடூரமானது” என்று குறிப்பிட்ட, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, “இனவாதக் கண்ணோட்டங்களை முன்வைப்பவர்களுக்கும் மற்றும் அவற்றைக் கண்டிப்பவர்களுக்கும் இடையே எனக்குச் சமநிலை தெரியவில்லை.

அதிவலது கண்ணோட்டங்களை, எங்கே செவியுற்றாலும் அவற்றைக் கண்டிக்க வேண்டியது, பதவியில் இருப்பவர்களின் முக்கிய பொறுப்பு என்பதே என் கருத்து” என்றார்.

சார்லட்வில் சம்பவம், மூன்று செய்திகளைச் சொல்கிறது. முதலாவது, கனரக ஆயுதமேந்திய, நூற்றுக் கணக்கான நாஜிகள் மற்றும் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் நாடு தழுவிய, ‘வலதை ஐக்கியப்படுத்துவோம்’ பேரணி, ஓர் அமெரிக்க நகரைத் தற்காலிகமாக ஆக்கிரமித்து, எதிர்ப்பாளர்களை பீதியூட்ட, வடிவமைக்கப்பட்ட, ஓர் அரசியல் படுகொலையை நடத்தியது. அமெரிக்க உள்துறை, உளவுச்சேவைக்கு முன்தகவல் இல்லாமல், இது நடந்திருக்க முடியாது. அதேவேளை, இது அமெரிக்க அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளிடமிருந்து, ஆதரவைப் பெற்றுள்ளது என்பதையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சகாக்களின் கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன.

இரண்டாவது, இவ்வாறானதொரு நிகழ்வை நடாத்தியதன் ஊடு, தனது எதிர்ப்பாளர்களுக்கும் பாரம்பரிய இரு கட்சி முறைக்குள் பயணிப்பவர்களுக்கும் வலுவான எச்சரிக்கையொன்றை ட்ரம்ப் வழங்குகிறார்.

குறிப்பாக, ட்ரம்ப் உருவாக்க நினைக்கும் ஒரு மாற்று அடித்தளம், அவருக்கு இருப்பதைக் குறித்து, குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியில் உள்ள ட்ரம்பின் எதிர்ப்பாளர்களுக்கு, சார்லட்வில் நிகழ்வு ஓர் எச்சரிக்கையாகும்.

மூன்றாவது, சார்லட்வில் நிகழ்வானது, நிறவெறிக் கும்பலின், இதுமாதிரியான படுகொலை நடவடிக்கைக்கு, அரசாங்கத் தலைவரிடம் இருந்து நேரடியாக ஆதரவு கிடைப்பதென்பது முன்னர் நடந்ததில்லை. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்ததைப் போல, ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், அவற்றின் ஆட்சிக்கு அடித்தளத்தை அமைக்க, ஒரு பாசிசவாத இயக்கத்தை முடுக்கிவிடுவதற்கு செயற்பட்டு வருகின்றன.

எந்தநாடு, தன்னை ஜனநாயகத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டதாக பெருமை கொண்டதோ, எந்தநாடு ஜனநாயகத்துக்காக உலகெங்கும் போர் தொடுத்ததோ, அந்நாட்டிலேயே இச்செயல்கள் நடந்தேறுவது பலருக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும்.

ஆனால், இதை விளங்கிக் கொள்வது கடினமல்ல; நிறவெறி பற்றி, யாருமே அதிகம் கூச்சப்படுவதில்லை. சிலசமயம் பெருமைப்பட்டுக் கொள்ள கூடிய விடயமாகவே நிறவெறி இருந்துள்ளது. நிறவெறி என்பது, ஆழ்ந்த நோக்கில் அர்த்தமற்ற ஒன்று. நிறவெறி பெரும்பாலும் இனவுணர்வுடன் சேர்ந்தே வெளிப்படுகிறது.

ஒரு சமுதாயம், முன்னேறிய ‘நாகரிக’ சமுதாயம் என்பதால், அங்கே இனவாதமும் இனவெறியும் இல்லை என்றாகாது. ஐக்கிய அமெரிக்காவில், நீக்ரோக்களுக்கு எதிரான இனவெறி, தென்னாபிரிக்க வெள்ளை இனவெறி, ஹிட்லின் ஜேர்மனியில் ஆரிய இனவெறி, ஜாரின் ரஷ்யாவில் பேரினவாதம் இவையெல்லாம் பின்தங்கிய சமுதாயங்களுக்குரியவை அல்ல.
இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.

இன்று அமெரிக்காவில் அரங்கேறுபவை, கடந்த அரை நூற்றாண்டுகால அமெரிக்க நிகழ்வுப் போக்குகளின் விளைவுகளுடன் நெருங்கிய தொடர்புடையவை.

ஈராக்கில் தொடங்கி, ஆப்கானில் விரிவடைந்து லிபியாவில் காலூன்றி, பின்னர் சிரியாவில் சிக்கிச் சீரழிந்த கதை, அமெரிக்க இராணுவ மேலாதிக்கப் போர்களின் கதையாகும்.

இது ஒருபுறம், போரையும் வன்முறையையும் ஒரு சமூக நோயாக வளர்த்தெடுத்துள்ளது. 2008இல் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வந்த சமூகப் பொருளாதார சமத்துவமின்மையை, புதிய தளத்துக்கு இட்டுச் சென்றது.

இது அரசியல் ரீதியாக, அமெரிக்க சமூக அடுக்குகளில் உள்ளவர்களைக் குரலற்றவர்களாக மாற்றியது. இதன், நீண்டகால விளைவாகவே, ட்ரம்பின் வருகையும் அவரது அப்பட்டமான நிறவெறிப் பேச்சுகளுக்கான பேராதரவும் அமைந்தன.

முதலாளித்துவம், ஜனநாயகம் என்ற சோடனைகளால் கட்டியெழுப்பிய அமெரிக்க பிம்பம், இன்று அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது. இந்நாட்டின் மிகவும் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய சமூக சக்திகளை அணிதிரட்டுவதற்கான வாய்ப்பை, ட்ரம்ப் உணர்கிறார். இது புதிய அரசியல் போக்குக்கான வழியாக இருக்கவியலும் என நம்புகிறார்.
இதன்வழி, பரந்த மக்கள் பிரிவுகளிடையே அதிகரித்து வரும், விரக்தி மற்றும் அன்னியப்படலுக்கு முறையிடும் ஒரு பாசிசவாத இயக்கத்தின் அபிவிருத்தியை, ஊக்குவிப்பதற்கும் சட்டபூர்வமாக்குவதற்கும் அவர் முயன்று வருகிறார்.
ஆனால், நாஜி வன்முறையை அவர் பாதுகாப்பது வெறுமனே தனியொருவரின் பிற்போக்கான மற்றும் பின்தங்கிய கண்ணோட்டத்தை பிரதிபலிக்கவில்லை. ட்ரம்புடன் சேர்ந்து, அமெரிக்காவை வழிநடத்துகின்ற நிதியியல், செல்வந்த தன்னலக் குழுக்களின், அமெரிக்க எதிர்கால சிந்தனையையும் பிரதிபலிக்கின்றன.

உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் மீது, அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவிய, இரண்டாம் உலக போர், பாசிசத்துக்கு எதிரான ஒரு போராக முன்வைக்கப்பட்டது.

‘ஜனநாயகம்’ மற்றும் ‘மனித உரிமைகள்’ என்ற வாய்சவடால் கொண்டு நியாயப்படுத்தப்பட்ட, கடந்த கால் நூற்றாண்டில் நடந்தேறிய ஒவ்வொரு போரும், ஹிட்லரின் நவீன அவதாரமாக வர்ணிக்கப்பட்ட ஏதோவொரு அரசு தலைவரை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்காக தொடுக்கப்பட்டது.

அவை, ஜனநாயகத்தை மீட்கும் அல்லது தக்கவைக்கும் நடவடிக்கைகளாகக் காட்டப்பட்டன. இப்போது, ‘சுதந்திர உலகின்’ தலைவர் என்று கூறப்படுபவர், அவரது பாசிசவாதத்தின் நவீன தந்தையாக உருவெடுக்கிறார்.

ஜனநாயகம் என்பது, தாராண்மைவாத ஜனநாயகமாக விளங்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் மயப்பட்ட மக்களுக்கான ஜனநாயகம் என்றவொன்று பேசும்பொருளாக இல்லை. அமெரிக்கா, கட்டமைத்த முதலாளித்துவ ஜனநாயகமே, ஜனநாயகமாகப் பொருள்கொள்ளப்படுகிறது.

இன்று, அங்கு பாசிசம் ஜனநாயகத்தின் பெயரிலேயே அரங்கேறுகிறது. இன்று, அமெரிக்கா கட்டவிழ்க்கும் ஜனநாயகம் விட்டுச்செல்லும் கேள்விகள், ஏனைய நாடுகளுக்கும் பொருந்துகின்றன.

ஜனநாயகம் குறித்து எழுத்தாளர் அருந்ததி ராய் வினவும் கேள்விகளோடு இதை நிறைவு செய்வது பொருத்தம். “நாம் ஜனநாயகத்துக்கு என்ன செய்துவிட்டோம்? அதை என்னவாக மாற்றி உள்ளோம்? ஜனநாயகத்தை முழுமையாகப் பயன்படுத்திய பின் என்ன ஆகும்? அது உள்ளீடற்றதாக, அர்த்தம் இல்லாததாக மாற்றப்பட்டுவிடும் போது, என்ன ஆகும்?

ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் பயங்கரமானவைகளாக மாறிவிடும் போது என்ன ஆகும்? தற்போது, ஜனநாயகமும் கட்டற்ற சந்தையும் மனிதர்களைக் கொன்று தின்றும், அழித்தொழிக்கும் ஒரே உயிரினமாக, இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட, குறுகலான பார்வையுடன் செயல்படும்போது, என்ன ஆகும்? இந்த நடைமுறையைத் தலைகீழாக மாற்றி அமைக்க முடியுமா? உருமாற்றம் அடைந்த ஒன்று மீண்டும் தனது பழைய நிலைக்குப் போக முடியுமா”

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...