மகிந்த வெளியேறுகிறார்; பொதுஜன முன்னணியில் இணைகிறார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த  கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களும் இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.

22 சு.க. எம்.பி.க்கள் இலங்கை பொதுஜன முன்னணி உறுப்புரிமையை ஏற்றுக் கொள்ளவிருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் அவர்கள் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியல் கட்சியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தியோகப் பற்றற்ற பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தன. அதேவேளை சு.க. உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருக்கின்ற போதிலும் புதுக் கட்சியில் இணைந்து கொள்வார்கள். புதிய கட்சியில் ராஜபக்ஷவும் சு.க. உறுப்பினர்களும் இணைந்து கொண்டால் அவர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழந்து விடுவது தொடர்பான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள்.

ஏனெனில் சு.க.வின் கீழேயே அவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். எவ்வாறாயினும் ராஜபக்ஷவும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் இருப்பதை உறுதிப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று பீரிஸ் கூறியுள்ளார். இலங்கை பொதுஜன முன்னணி மகிந்தவின் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியின் நோக்கம் அரசாங்கத்தை வீழ்த்துவதல்ல. ஆனால் அதனை பலவீனப்படுத்துவதாகும். அதேவேளை சு.க. பொதுச் செயலாளர் துமிந்த தசாநாயக்க இது தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறுகையில், சு.க. உறுப்பினர்கள் எவரும் தாங்கள் வெளியேறப் போவதாக உத்தியோகபூர்வமாக கட்சிக்கோ அல்லது செயலாளருக்கோ இன்னும் கூறியிருக்கவில்லையென்று தெரிவித்திருக்கிறார்.

உத்தியோகபூர்வமான அறிவித்தல் விடுக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...