கொசுவைக் கொல்ல ஒரு கருவி!

அவரது கண்டுபிடிப்பை வீடியோவாகப் பார்க்க:

மனிதனின் ஜென்ம எதிரி கொசு. குரங்காக இருந்த காலத்திலிருந்தே விடாமல் துன்புறுத்துகிற கொசுவிடமிருந்து தற்காத்துக்கொள்ள இன்னமும் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறான் மனிதன். புகைமூட்டம், வேப்பெண்ணெய் விளக்கு, கொசு வலை, கொசுவத்தி, கொசு ‘மேட்’, திரவ விரட்டி, உடலில் கிரீம் அல்லது எண்ணெய் பூசிக்கொள்வது என்று எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்தாலும் கவுண்டமணி மொழிந்ததுபோல் ‘இந்த கொசுத் தொல்லை’யைப் போக்க முடியவில்லை.

சமீபத்தில் டான் ரோஜாஸ் என்பவர், மின்விசிறி உதவியுடன் ஒரு தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். மின்விசிறியைப் போட்டுவிட்டு போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்கும் தொழில்நுட்பமல்ல. இது வேறு மாதிரி. கொசு எப்படி மனிதனையோ, விலங்குகளையோ எளிதாகக் கண்டுபிடித்து வருகிறது என்ற அடிப்படை யைக் கையில் எடுத்தார் அவர். பிராணிகளின் உடலிலிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடும், உடல் வெப்பமும்தான் கொசுவை ஈர்ப்பவை.

எனவே, தன் வளர்ப்பு நாயை ஓர் இரும்புக் கூண்டில் படுக்க வைத்து, அதைச் சுற்றி காற்றை வேகமாக உள்ளிழுக்கிற இரண்டு மூன்று (தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான சக்திமிக்க) மின்விசிறிகளை வைத்தார். அந்த மின்விசிறிகளின் மீது உலோக கொசுவலை ஒன்றையும் விரித்தார். நாயை நோக்கிவந்த கொசுக்கள் எல்லாம் வேகமாக ஈர்க்கப்பட்டு அந்த கொசு வலையில் சிக்கிக்கொண்டன. காற்றின் வேகம் காரணமாக அவற்றால் தப்பிக்க முடியாமல் துடிக்கும்போது, ஆல்கஹால் திரவத்தை அவ்வப்போது தெளித்து அவற்றைக் கொன்றார். இப்படி இரண்டு நாள் இரவில் செத்துப்போன கொசுக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? சுமார் 8,000!

அச்சச்சோ, எலிப்பொறிக்குள் இருக்கிற தேங்காய்த் துண்டு போல மனிதரோ, நாயோ இருந்தால்தான் கொசுவைக் கொல்ல முடியுமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதற்கும் மாற்று வழியைக் கண்டறிந்திருக்கிறார் ரோஜாஸ். அதாவது, கார்பன்டை ஆக்ஸைடு வாயு நிரம்பிய ஒரு பாட்டிலைத் திறந்தாலே, அதை நோக்கிக் கொசுக்கள் வரும். ஆக, விலங்குக்குப் பதில் பாட்டில் இருந்தால் போதும், கொசுவைக் கொல்ல முடியும்.

இன்று உலகுக்கே பெரும் சவாலாக இருக்கிற ஜிகா, மலேரியா, டெங்கு கொசுவை இப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது ரோஜாஸின் நம்பிக்கை. அவரது ஆய்வு நடந்தது வீட்டுக்கு வெளியில். படுக்கை அறையில், இவ்வளவு சக்திமிக்க மின்விசிறியை ஓட வைத்துத் தூங்குவது சிரமம். எனவே, இப்போதைக்கு இவரது கண்டுபிடிப்பை அப்படியே பயன்படுத்த முடியாது. எதிர்காலத்தில் ரோஜாஸைப் போல் யாரேனும் ஒருவர், இதில் ஏதாவது சிலபல மாற்றங்கள் கொண்டுவந்து கொசுத் தொல்லையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்புவோம்!

– கே.கே.மகேஷ் magesh.kk@thehindutamil.co.in

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...