“அரசிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்”

அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அனைவரையும்  அங்கிருந்து வெளியேறி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியான தம்முடன் கைகோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக் கிழமை பகிரங்க அழைப்பு விடுத்தார்.

தம்புள்ள யாப்பாகமவிலுள்ள, முன்னாள் அமைச்சரும், தம்புள்ள ஸ்ரீலசு கட்சியின் முன்னாள் அமைப்பாளருமான ஜனக பண்டார தென்னக்கோனின் வாசஸ்தலத்தில் இடம் பெற்ற சமய வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ இவ்வழைப்பை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

“ஜனவரி 8 ஆம் திகதி நாம் தோல்வியடைந்த பின்னரான காலத்தில் ஸ்ரீ.ல.சு,கட்சி மிகவும் கீழ் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணக் கூடியதாக விருக்கின்றது, கட்சியைக் கட்டிக் காத்து வளர்த்தவர்கள் பலரும் உதாசீனம் செய்யப் பட்டுள்ளனர். இது ஓர் ஆரோக்கியமான செயற்பாடல்ல.

தற்போது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்குள் அடித்துக் கொள்கின்றனர்.அவர்களுக்குள்ளேயே நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர். ஒருவருக்கொருவர் தூஷித்துக் கொள்கின்றனர்.

அன்று என்னைத் திருடன் என்று கூறினார்கள். இன்று அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே திருடர்கள் என்று கூறி ஒருவரை யொருவர் திட்டிக் கொள்கின்றனர்.
இன்று நாட்டின் செல்வங்கள் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு விற்கப் படுகின்றன.விமான நிலையம், துறைமுகம் என்பன விற்கப் பட்டு விட்டன, துறைமுகம், விமான நிலையம் என்பன பெறுமதியற்றவை என்று அன்று கூறியவர்கள் இன்று அவற்றைப் பல கோடிகளுக்கு விற்பனை செய்வதைக் காண முடிகிறது.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இவற்றை விற்று இலாபம் பெறுவது தனி நபர்களா, அரசாங்கமா என்பதை அறிவதற்கு ஓர் கமிஷன் அமைக்க நேரிடலாம்.
இந்நாடு கடன் சுமையிலிருப்பதாகக் கூறப் படுகின்றது. நான் பெற்ற கடன் தொகையிலும் பார்க்க அதிக கடனை பல காரணங்களைக் கூறி இவ்வரசாங்கம் பெற்று வருகின்றது.மத்திய வங்கியில் மேற் கொள்ளப் பட்ட ஊழல் மோசடி எனக் கூறிக் கொள்ளும் கொள்ளையின் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே இவ்வாறு அரசாங்கம் கடன் பெறுகின்றது.

மஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு அருகில் மலர்மாலை விற்பனை செய்யும் கடைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று நேற்று ஒரு சட்டத்தரணி கண்டியில் வைத்து என்னிடம் கூறினார். ஏனென்று வினவிய போது, அனைத்துத் திருடர்களும்  சிறையிலிருந்து அல்லது நீதி மன்றிலிருந்து வெளியேறுகையில் அவர்களை மலர்மாலை அணிவித்து அழைத்துச் செல்வதை இந் நாட்களில் காணக் கூடியதாகவிருப்பதாக அவர் கூறினார்.

விவசாயி ஒருவரின் மைந்தன் ஆட்சி செய்யும்  நிலையிலும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் விவசாய அமைச்சராக இருக்கும் நிலையிலும், நாட்டில் மேலதிக அரிசி காணப்படுவதாகத் தெரிவித்து இலட்சக் கணக்கான ஏக்கர் நிலங்களில் நெற் செய்கை தடுக்கப் பட்டது. உர நிவாரணம் குறைக்கப் பட்டது. எமது கட்சிக் கொள்கைகளை விற்று வாழ்வோர் இனியாவது எமது ஒருங்கிணைந்த கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்களான ஜனக்க பண்டார தென்னக்கோன், ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட அமைச்சர்கள்  மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

தம்புள்ள  நிருபர்

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...