வடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; 12,000 முன்னாள் புலிகள் உள்ளனர்; இராணுவ முகாம்களை அகற்றக்கூடாது;

வடக்கில் முன்னாள் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாகவும் இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே
அரசாங்கம் இருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்  தொடர்பாக பொலிஸார் ஊடக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, வடக்கில் அண்மைக்காலமாக பொலிஸார் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் போது மேலும் தெரிவிக்கையில்;

வடக்கில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பொலிஸாரின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இது தொடர்பாக சிலரை கைது செய்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதனால்தான்  அங்கிருந்து இராணுவ முகாம்களை நீக்க முடியாது என நாங்கள் மேற்குலக நாடுகளுக்கு தெரிவிக்கின்றோம்.

30 வருட யுத்தத்திற்கு காரணமாக பயங்கரவாதிகளுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றி பெற்று நாட்டை ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இவ்வாறான நிலைமையில் ஒரே தடவையில் அங்கிருந்து விலக முடியாது. சரணடைந்த 12,000 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் ஊர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

சரியாக அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதா என்பது தொடர்பாக சந்தேகங்கள் உள்ளன. இதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களினால், நாட்டின் பாதுகாப்பு கருதியே இன்னும் அங்கு இராணுவ முகாம்கள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

ந.ஜெயகாந்தன்

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...