பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் அதன் விதைகள் மீண்டும் முளைக்கும்;

பயங்கரவாதம் அழிக்கப்பட்டாலும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் முளைக்கும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.

யுத்தத்தில் ஆயுதங்கள் அழிக்கப்பட்டாலும், பயிற்சி பெற்றவர்களின் மனோபலத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட பகுதி நிலைமைகளை ஆராயும் நோக்கில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு பொலிஸ்மா அதிபர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சிவில் பாதுகாப்பு தரப்பினரை யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் பேசுகையில்:

வடக்கின் தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. பயங்கரவாதம் என்ற விடயம் இலங்கைக்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது.

நாட்டில் நடைபெற்ற மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த யுத்தத்தின் முடிவில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்ததாக சொல்லப்படுகின்றது. இருப்பினும் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் பயங்கரவாதம் விதைத்த விதைகள் மீண்டும் முளைக்க இடமுண்டு. பயங்கரவாதிகளின் இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. எனினும் அவர்கள் வழங்கிய பயிற்சியை பெற்றவர்களின் மனோபலம் மாற்றமடையவில்லை.

பொது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நிகழ்வுகள் கிழக்கிலன்றி வடக்கிலேயே இடம்பெறுகின்றன.  இதற்கு இடமளிக்க முடியாது. முதல் ஒரு சம்பவம் இடம்பெற்றது. இவ்வாறான நிகழ்வுகள் தொடராக இடம்பெறுவதை ஏற்க முடியாது.

இதனை பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் படையினரைக் கொண்டு தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் பொது மக்களின் ஆதரவு மூலமே சாத்தியமாகும். சில குழுக்கள் மற்றும் தனிப்பட்ட சிலர் மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை விரும்பவில்லை.  அத் தரப்பினர் கைதுகள் இடம்பெறுகின்றது. ஆட்கள் காணாமல் போகின்றனர். பழி வாங்கப்படும் படலம் இடம்பெறுகின்றது. சட்டம் ஒழுங்கில்லையென ஊடகங்கள் மூலம் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். தேசிய ரீதியில் மட்டுமல்ல வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் நோக்கம் நிதியை ஈட்டிக்கொள்வதேயாகும்.

தற்போது பொலிஸ் திணைக்களத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திறமையான  பயிற்சிகள், பதவியுயர்வுகள். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு என உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கு மக்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்க விசேட அதிரடிப்படையினர், இராணுவம் , கடற்படை என சகல படைத்தரப்பினரின் உதவியை பெற்று கொள்ளவுள்ளோம். இதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தவுள்ளோம். நாம் சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டே நாம் செயற்படுவோம். சந்தேக நபரை சாட்சிசகிதம் கைது  செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். இரு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புனர்வாழ்வு பெறாதவர்கள் என்றார்.

க.ஹம்சனன்

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...