இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன?

இந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா? இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும்.

1987-க்குப் பிறகு இலங்கையில் நடந்த முக்கியமான அரசியல் மாற்றம் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள், ராணுவத்துடனான மோதலில் தோற்கடிக்கப்பட்டு மறைந்த சம்பவமாகும். தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இனப் பூசலை அரசியல்ரீதியாகவும் அரசியல் சட்டப்படியும் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இந்திய-இலங்கை உடன்பாடு. இந்தியா எடுக்கும் அரசியல் முயற்சியால் இனப்பிரச்சினை தீர்வதுடன், எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் பாதையில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைக்கும் என்று ராஜீவ் காந்தி கருதினார். உடன்பாட்டின் கூறுகளும், இணைப்புகளும் இதில் மறைமுகமாக வெளிப்பட்டன.

உடனடி நோக்கங்கள்

இந்த உடன்பாடு இரண்டு உடனடி நோக்கங்களைக் கொண்டிருந்தது. தமிழ்ப் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசியல் நீரோட்டத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதன் மூலம் இனப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது முதலாவது நோக்கம். இலங்கையின் அரசியல் சட்டத்தையும், நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பையும் மாற்றியமைத்து தமிழ்ச் சிறுபான்மையினர் வாழும் மாகாணங்களுக்கு சுயாட்சி உரிமையை, அதிகாரப் பகிர்வு மூலம் பெற்றுத்தருவது இரண்டாவது நோக்கம். இவ்விரு நோக்கங்களுக்கும் ஓரளவுக்குத்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தவிர பிற போராளிக் குழுக்கள் புதிய அரசியல் பாதையை ஏற்கத் தயார் என்று ஒப்புக்கொண்டன. புலிகள் இயக்கம் இந்த உடன்பாட்டை ஏற்க முடியாது என்று நிராகரித்ததுடன் இலங்கை அரசுடன் மட்டுமல்லாமல் இந்திய அரசுடனும் போரிட முற்பட்டது. இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட நான்கு மாதங்களுக்குள் இந்தியாவும் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்க நேர்ந்தது. இலங்கையின் உள்நாட்டு அரசியலில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட திருப்பங்களையும் சரிவுகளையும் இது உணர்த்துகிறது.

2009 மே வரையில் இந்த உள்நாட்டுப் போர் நீடித்தது. அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு, விடுதலைப் புலிகளைப் போரில் வீழ்த்தியது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் என்று எல்லாத் தரப்பின் ஆசியுடனும் ஆதரவுடனும்தான் இதை நிகழ்த்த முடிந்தது. இந்த வெற்றி ஏற்படுத்திய உற்சாகத்திலும், நம்ப முடியாத வியப்பிலும் ஆழ்ந்த ராஜபட்ச, ‘உலகிலேயே பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் நிகழ்த்தி பெறப்பட்ட வெற்றி இதுதான்’ என்றுகூட பெருமைப்பட்டார். இந்தப் போர் முடிவால், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் அணுகுமுறைக்கு நிரந்தரமாகவும் வலுவாகவும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற முயற்சிதான் இந்திய-இலங்கை உடன்பாட்டுக்கே அடிப்படையாக இருந்தது.

இரண்டாவது நோக்கத்துக்கு அரசியல் சட்டத் திருத்தம் தேவைப்பட்டது. இலங்கையின் 1978 அரசியல் சட்டத்துக்கு 13-வது திருத்தம் 1987 நவம்பரில் கொண்டுவரப்பட்டுச் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் மாதிரியின் அடிப்படையில் இலங்கை மத்திய அரசு, ஒன்பது மாகாண அரசுகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தத் திருத்தம் வழி செய்தது. இந்தத் தீர்வு தங்களுடைய தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை நிறைவேற்றப் போதாது என்று கூறி விடுதலைப் புலிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு நாட்டின் பன்மைத்துவம், பல்வேறு இனப் பிரிவுகளின் உரிமைகளுக்கேற்பச் சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற சீர்திருத்தங்களை விரும்பாத அரசை இந்த 13-வது திருத்தமானது, அரசியல் சட்டப்படியாவது அதிகாரப் பகிர்வை நோக்கி நகர்த்தியிருந்தது.

உடன்பாட்டு வாசகங்கள்

இரு நாடுகளிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் இலங்கையின் நடப்பு அரசியலுக்கு குறிப்பிடத்தக்க வகையில், நிரந்தரமாக அளித்துள்ள பங்களிப்பு இந்த அதிகாரப் பரவல் அம்சம்தான். 1987 உடன்பாட்டில் குறிப்பிடப்பட்ட கூறுகளுக்கு முக்கியக் காரணம் அப்போது இருந்த அரசியல், வரலாற்றுக் கண்ணோட்டம்தான். அது உடன்பாட்டு வாசகங்களிலும் நன்கு வெளிப்பட்டது. அவையாவன:

1. இலங்கை பல்வேறு இன, கலாச்சாரங்களைக் கொண்ட சமூகம்.

2. தமிழர்கள் தனி நாடு கோருவதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அரசியல்ரீதியாகத் தருவது சாத்தியமில்லை.

3. ஒற்றையாட்சி அல்லது பிரிவினை என்ற இரு எதிர் நிலைகளுக்கும் சிறந்த மாற்று மாநில சுயாட்சிதான்.

4. இலங்கையின் இன மோதல்களை அரசியல் வழிமுறைகள் மூலம்தான் கையாள முடியும் என்பவையே உடன்பாட்டுக்கான அடிப்படைகள். இலங்கையின் சிறுபான்மையின மக்களுக்கு நியாயமான அரசியல், சமூகக் குறைகளும், தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசைகளும் இருப்பதை அங்கீகரிப்பவை இந்தக் கூறுகள். இலங்கையை வலுப்படுத்தவும் அரசியல்ரீதியாகச் சீர்திருத்தவும் சட்டதிருத்தங்கள் அவசியம் என்பதை ஆளும் சிங்கள வர்க்கத்துக்கு உணர்த்த வலுவான ஒரு வெளியாள், வெளியிலிருந்து கையை முறுக்கி உடன்பாட்டைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது என்பது வியப்பு. அதை ஒப்புக்கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டதுதான் ஜெயவர்த்தனே நாட்டுக்கு ஆற்றிய ஆக்கபூர்வக் கடமை.

1987 நவம்பருக்குப் பிறகு இலங்கையின் மாகாண கவுன்சில் அமைப்பு முறைக்கு என்ன ஆனது? அதில் பல திருப்பங்களும் திகைப்புகளும் ஏற்பட்டன. மாகாண கவுன்சிலுக்கு நடந்த முதல் தேர்தலில் வெற்றி பெற்ற ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’ (இபிஆர்எல்எஃப்) முதல் கூட்டணி அரசை அமைத்தது. அது தீவிர இடதுசாரி அமைப்பு. கொழும்பில் இருக்கும் இறுக்கமான, அனுதாபமற்ற, நழுவலான போக்குகளை உடைய அதிகாரவர்க்கம் அந்த அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் சலிக்க வைத்தது. பிறகு அந்த அமைப்பு ஒருதலைபட்சமாக, சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அதன் உறுப்பினர்கள் இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்தனர். சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஏழு மாகாணங்களில் இந்த கவுன்சில்கள் தொடர்ந்து செயல்பட்டன. எங்கும் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற கோரிக்கை எழவேயில்லை.

இந்த கவுன்சில்கள், சட்டத்தின் உண்மையான நோக்கப்படியாக அமையாமல் மத்திய அரசு மற்றும் ஆளுங்கட்சியின் நீட்சியாகவே அமைந்தன. அங்கு அரசியல் ஊழலும், அரவணைப்பு அரசியலும் அதிகாரப் பரவலாக்கப்பட்டு, ஜனநாயகப்படுத்தப்பட்டது! 2013 போருக்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த தமிழ்த் தேசிய கூட்டணியால்கூட இந்த செயல்படாத் தன்மையை மாற்றவே முடியவில்லை. முதலமைச்சராக இருக்கும் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய கட்சியினரின் விருப்பத்துக்கே மாறாக நடக்கிறார்; வடக்கு மாகாண மக்களுக்கு பிராந்திய சுயாட்சி அளிப்பதற்கு புதிய வழி ஒன்றைக்கூட அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘அதிகாரப் பரவல்’ என்பது உண்மையில் ‘அதிகாரமற்ற பரவலாகவே’ திகழ்கிறது. இது ஏன் என்று அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இறுதியில் என்ன?

1987 ஜூலை முதல் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனப் போர் முடிந்துவிட்டது. ஆயுதமேந்திய போராளிகளால் அரசுக்கு ஆபத்து என்ற அச்சம் நீங்கிவிட்டது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) என்ற இயக்கத்தின் மூலமான ஆயுதக் கிளர்ச்சி 1989-லேயே ஒடுக்கப்பட்டுவிட்டது. ஜேவிபி இப்போது தன்னை வலுவான அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டுவிட்டது. எதேச்சாதிகார ஆட்சிகள் வந்தன, மறைந்தன. மீண்டும் ஜனநாயக உணர்வுகளை மீட்டும் முயற்சிக்கு ஓரளவுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக ஒன்றுக்கொன்று முரணான தொலைநோக்கு திட்டங்களுடன் புதிய தலைமுறை அரசியல் தலைமை ஏற்பட்டிருக்கிறது.

இத்தனை மாற்றங்களுக்கும் நடுவில் ஒன்று நிலையானதாக இருக்கிறது. அரசைச் சீர்திருத்த வேண்டும் என்ற முயற்சி கடுமையாக எதிர்க்கப்படுகிறது; இலங்கையைப் பல இன தேசமாக, பன்மைத்துவம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. சீர்திருத்தங்களை மக்கள் ஆதரிக்கும் போதும், தேர்தலில் வெற்றி பெற சீர்திருத்தங்களை ஆதரிப்பதாக தலைவர்கள் உறுதியளித்த போதும் இந்த எதிர்ப்புகள் நீடிக்கின்றன. உடன்பாடு ஏற்பட்டு முப்பதாண்டுகள் கடந்தும் அரசியல்சட்ட சீர்திருத்தத்தைச் செய்வதற்கான வேகத்தை இலங்கை இழந்து கொண்டேயிருக்கிறது.

இந்திய- இலங்கை உடன்பாடு விட்டுச் சென்ற முக்கிய மரபு எதுவென்றால் அதிகாரப் பரவலின் அவசியத்தை உணர்த்திய கருதுகோள்கள்தான்.

ஜெயதேவ உயங்கொட

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...