பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி; நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் ஆகிறார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான அறிவிப்பை மக்களவை செயலர் அனூப் மிஸ்ரா வெளியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் 3,67,314 வாக்குகள் பெற்றிருந்தார். தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,69,358 ஆகும்.

முதல்வர் பழனிசாமி பங்கேற்பு?

ஜூலை 24-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் நடைபெற்று வந்தது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடந்த 17-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா மாரும் போட்டியிட்டனர்.

வாக்கு பதிவுக்காக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் தலா ஒன்று என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 99 சதவீத வாக்குகள் பதிவாயின.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் குறித்த தகவல்களின் தொகுப்பு:

யார் இந்த ராம்நாத் கோவிந்த்?

* உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர், கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

* பிறகு டெல்லி உயர் நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

* வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கி உள்ளார்.

* 1977-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

* அதன்பிறகு பாஜவில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991-ம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார்.

* இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994-ல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006-ம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

* அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.

* மேலும் பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.

* கல்வித் துறையிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (லக்னோ) நிர்வாகக் குழு உறுப் பினராகவும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

* கடந்த 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

* மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...