சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலா தரப்பிடம் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை காட்டி வருவதாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கடந்த புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். அடுத்த ஒரு வாரத்தில் இடைக் கால அறிக்கையும், ஒரு மாதத்தில் விரிவான அறிக்கை யும் தாக்கல் செய்ய வேண்டும் என இக்குழுவுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

அதிகாரிகள் தீவிர ஆய்வு

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறைத்துறை உதவி ஐ.ஜி. வீரபத்ரசாமி பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீரென ஆய்வு செய்தார். சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்ட அறைகளுக்கு பெண் கண்காணிப்பாளர் அனிதா உடன் சென்று பார்வையிட்டார். இதேபோல முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கிய தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகளின் அறை, சமையல் அறை உள்ளிட்ட வற்றையும் ஆய்வு செய்தார்.

நேற்று காலை டிஜிபி சத்திய நாராயண ராவ் சிறைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம், சிறை முறைகேடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதை யடுத்து, சிறையில் பராமரிக்கப் படும் சசிகலா, தெல்கி உள்ளிட் டோரின் கோப்புகள், பார்வையாளர் பதிவேடு, சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து மாலையில் திடீரென டிஐஜி ரூபா சிறைக்கு சென்றார். அங்கு சசிகலாவின் அறை, சிசிடிவி வீடியோ அறை, மருத்துவமனை மற்றும் பல்வேறு கோப்புகளை ஆராய்ந்தார்.

இது தொடர்பாக டிஐஜி ரூபா டி. மவுட்கில் கூறும்போது, “சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த விவிஐபி வசதிகள், காட்டப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதற் கான ஆதாரங்கள் அழிக்கப் பட்டிருக்கின்ரன. நான் கடந்த வாரம் சிறையை ஆய்வு செய்தபோது, ஹேண்ட் கேமராவில் எடுத்த வீடியோ ஆதாரங்களை சிறை அதிகாரிகளே அழித்துள்ளனர். நான் கேட்ட வீடியோ, புகைப்பட ஆதாரங்களை எனது பென்டிரை வில் அவர்கள் பதிவேற்றவில்லை.

மேலும் சசிகலாவுக்கு வழங்கப் பட்டிருந்த நவீன சமையலறை, அங்கிருந்த பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறது. சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அமர்வதற்காக 4 நாற்காலிகள், 1 மேஜை போடப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா 7 மற்றும் 8 ஆகியவற்றின் காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்நிலையில் டிஐஜி ரூபா டி. மவுட்கில் நேற்று கர்நாடக உள்துறை செயலர், காவல் துறை இயக்குநர் ஆர்.கே.தத்தா, சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்டோருக்கு 2-வது அறிக்கையை அனுப்பினார். அதில், “கடந்த வாரம் நான் சிறையில் ஆய்வு செய்தபோது கண்டறிந்த பல விஷயங்கள் ஆதாரமின்றி அழிக்கப்பட்டுள்ளன. சசிகலா, தெல்கி தொடர்பான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை சிறை அதிகாரிக‌ளே அழித்துள்ளனர். சசிகலா இருக்கும் இடத்தை சிசிடிவி கண்காணிப்பில் இருந்து விலக்கி வைத்துள்ளனர்.

இருப்பினும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட‌ சசிகலாவுக்கு விவிஐபி வசதியும், சிறப்பு சலுகை யும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறப்பு சமையலறை, சிறப்பு வரவேற்பு அறை, பெரிய அளவி லான‌ தொலைக்காட்சி வழங்கப் பட்டிருக்கிறது. சசிகலாவின் அறை முழுவதும் விலை உயர்ந்த தரை விரிப்பு, ஜன்னல் ஸ்கிரீன், பெரிய மெத்தை, ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சிறையில் சசிகலாவுக்கு தனியாக சமைக்கவும், அவருக்கு உதவவும் சக கைதிகள் பயன்படுத் தப்பட்டுள்ளனர்.குறிப்பாக பார்வை யாளர் சந்திக்க வரும் இடத்தில் ஒரு பெரிய அளவிலான சோஃபா, 4 நாற்காலிகள், 1 மேஜை ஆகி யவை போடப்பட்டுள்ளன. இவை பதிவாகாமல் இருக்க அந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி அகற் றப்பட்டுள்ளது. இது தவிர, வெளி யில் இருந்து சசிகலாவுக்கு பழம், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட் களை அதிகாரிகளே வாங்கி வந்து தருகின்றனர்” என குறிப்பிட் டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறையில் சொகுசாக வாழும் தெல்கியின் வீடியோ வெளியானது

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி பரப்பன அக்ர‌ஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏ.கே.தெல்கியின் அறை வீடியோ காட்சிகள் கன்னட தனியார் தொலைக் காட்சியில் நேற்று வெளியானது. அதில் உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்ட தெல்கிக்கு உதவ 2 சிறைக் கைதிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் அவ ருக்கு கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் மசாஜ் செய்கின்றனர்.

சரியான நேரத்தில் தெல்கிக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவும், மருந்துகளும் வழங்கப் படுகிறது. அப்போது தெல்கி, 52 அங்குல எல்சிடி தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்தவாறே சாப்பிடுகிறார். மேலும் தெல்கியின் அறையில் மிக சொகுசான சோஃபா, கட்டில் மெத்தை, மினரல் வாட்டர் இயந்திரம், சமையலறை, ப்ரிட்ஜ் உள்ளிட்ட வசதிகளும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகள் கர்நாடக சிறைத்துறை வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரா.வினோத்