என்னவொரு நடிப்புடா சாமீ!

நாங்கள் பகிரச் சொல்லிக் கேட்கும் அதிகாரங்கள் என்ன மாதிரியானவை என்பதைத் தெளிவுபடுத்தாமல், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரே அலகுக்குள் சமஷ்டியே தீர்வு என்று தேர்தல் நேரத்தில் வெறுமனே அடித்து விடுவது, இரண்டு பக்கத்திலும் சூட்டைக் கிளப்பி விடத்தான் என்பது பலருக்கும் புரியும்.

கவனித்துப் பாருங்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றிச் சிங்கள மக்களை உசுப்பேத்தும் விதமாக “இதுதாண்டா தேர்தல் சூடு” என்று அங்கே உள்ள தலைவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள்.

அதையெல்லாம் இங்கே தமிழ் மக்களுக்குத் திரும்பப் போட்டுக் காட்டி, “சமஷ்டி என்ற சொல்லைக் கேட்டாலே துள்ளிக் குதிக்கிறார்கள் பாருங்கள், இவர்களுக்கு இரண்டாந்தரக் குடிமக்களல்ல நாங்கள் என்று உணர்த்தும் விதமாக நம் ஒற்றுமையை இவர்களுக்குக் காட்ட வேண்டிய பொறுப்புத் தமிழ் வாக்காளர்கள் கைகளிலேயே இருக்கிறது” என்று இவர்களும் தேர்தல் கணகணப்பை ஏத்துகிறார்கள்.

இதுநாள்வரை இந்த சமஷ்டித் தனியலகின் சாதக பாதகங்களைப் பற்றி தென்னிலங்கைத் தலைவர்களுடன் விரிவாகவும் ரகசியமாகவும் உரையாடல்களை நடத்திவிட்டுத்தானே கடந்த ஜனவரியில் ஆட்சி மாற்றத்திற்குத் தமிழ் மக்களை வாக்களிக்கக் கோரினீர்கள்?

“மைத்திரியும் ரணிலும் சந்திரிகாவும் 2015-ல் தீர்வைக் கொண்டுவந்து விடுவதற்கு வாக்குறுதியளித்திருக்கிறார்கள். எழுத்தில் வேண்டாமா என்று சந்திரிகா அப்போது கேட்டார். உங்கள் வாய் வாக்குறுதியே போதும் என்று சொன்னோம் நாம். நல்லாட்சி அரசில் தேசிய நிறைவேற்றுச் சபை அமைத்து அதன் மூலம் தீர்வு காணப்படுவது உறுதி” என்று ஜனாதிபதித் தேர்தலின் போது சொன்னீர்களா இல்லையா?

அப்போது உங்கள் சமஷ்டித் தனியலகு கதையை அவர்கள் கேட்கவில்லையா? அல்லது நீங்கள் சொல்லாமலே அவர்கள் அதைத்தான் தருவதற்கு ஒப்புக்கொள்கிறார்கள் என்று நீங்களாக எண்ணிக் கொண்டீர்களா?

ஐக்கிய தேசியக் கட்சியும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் “ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு” என்று சொல்லியிருப்பதற்காக இப்போது கோபப்படுவது போல் நாடகம் போடும் நீங்கள், கடந்த ஜனவரியில் அவரைப் பிரதமராகக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்த போது இதுபற்றிக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளவில்லையா?

அவர்களிடம் தனிப்படப் பேசும்போதும் அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முழுமூச்சாக வேலைசெய்யும் போதும், அவர்கள் எதைத் தருவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேதான் ஆதரிக்கிறீர்களா?

ஏதோ இப்போதுதான் ஐ.தே.க வும் ரணிலும் கூட சமஷ்டியை ஏற்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு நீங்கள் அதிர்ச்சியடைவதைப் போல… என்னவொரு நடிப்புடா சாமீ!
சரி, தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டியைக் கேட்டிருக்கும் நீங்கள், அதைச் சாத்தியமாக்குவதற்குத் தேர்தலின் பின் என்னென்ன வழிமுறைகளை வைத்திருக்கிறீர்கள் என்பதைச் சொல்ல வேண்டுமல்லவா!

ஏனெனில், தேர்தல் முடிந்தவுடன் இதுபற்றி எதுவும் பேசாமலே, “இலங்கை அரசாங்கம் தீரவை வைக்காமல் இழுத்தடிக்கிறது, சர்வதேசம் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது” என்று ஒரு வீர வசனம்… அவ்வளவுதான்.

இதெல்லாம் அவர்கள் யார் யாரோ செய்ய வேண்டிய வேலை என்னும் விதமாகத் தமிழ் மக்களுக்குப் போக்குக் காட்டிவிட்டு இந்தத் தலைவர்கள் டிப்ளோமற் வீசாவில் அவரவர் குடும்பங்களைப் பார்க்கப் புறப்பட்டுப் போய்விடுவார்கள்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...