முதலமைச்சர் வீசிய குண்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆன சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர் கஜேந்திரகுமார் அணிக்கே சாதகமாகப் பேசி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தன் நிலையை விளக்கி முதலமைச்சர் இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் – வட மாகாண முதலமைச்சர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்பதாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தான் இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அபேட்சகர்களை ஆதரித்துப் பேசப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற முறையில் பக்கச் சார்பற்று நடந்து கொள்ளப் போவதாகக் கூறியிருக்கிறார். ஆயுதக் குழுக்களோடு சேர்ந்திருப்பதைத் தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது@ அதனால் தமிழரசுக் கட்சி சார்பில்தான் செயற்படுவேன் என்று சொல்லி சுரேஷ், செல்வம், சித்தர் ஆகியோரோடு முரண்பட்டுக் கொண்டவர் முதலமைச்சர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்த மக்கள்தான் முதலமைச்சரை மட்டுமல்லாது முப்பது உறுப்பினர்களையும் தெரிவு செய்து வடக்கு மாகாண சபையை கூட்டமைப்பு என்ற கட்சிக்குத் தந்தார்கள்.

இப்போது கூட்டமைப்பின் முதலமைச்சர், தனது கட்சியின் அரசியல் பலத்திற்காகப் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்வது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அல்லது அதன் தலைமை மீது அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இருக்க வேண்டும்.

அவர் மேலும் தனது அறிக்கையில், “மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது மக்கள் தெரிவு செய்யவேண்டும்” என்றிருக்கிறார். தனது கட்சியினர் அர்ப்பணிப்புடன் மக்களுக்காகப் பணியாற்றுவார்கள் என்று அவரால் சொல்ல முடியாமல் இருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

ஏனெனில், “எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்…” என்றும் அந்த அறிக்கையில் சொல்கிறார். அதாவது கூட்டமைப்பு எம்பிக்கள் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் அபிவிருத்திக்கு எனச் சொல்லிப் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்ததையே குறிப்பிடுகிறார்.

பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது போருக்குப் பின்னரான சூழலில் எமது மக்கள் எதிர்நோக்கும் மூன்று முக்கிய சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறார். முதலாவதாக புனர்நிர்மண மீள்குடியேற்ற அபிவிருத்திப் பணிகளையும், இரண்டாவதாக அரசியல் தீர்வையும், மூன்றாவதாக போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டியதையும் குறிப்பிடுகிறார்.

புனர்நிர்மாண அபிவிருத்திப் பணிகளை முதன்மைப்படுத்திக் குறிப்பிடுவதன் மூலம் கூட்டமைப்பினரை நிராகரிக்கச் சொல்லியே உணர்த்துகிறார். “தனிப்பட்ட மனித குழுக்களின் நன்மைகளுக்காக மட்டும் நடந்துகொள்ளாது, மற்றைய மக்கட் கூட்டங்களுக்குக் கெடுதி விளைவிக்காது, எமது தேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடிய மக்களின் நலனைப் பேணும் விதமாக அமையவேண்டும்” என்றும் குறிப்பிட்டு, இணக்க அரசியலின் தேவையையும் முதலமைச்சர் உணர்த்துகிறார்.

அறிக்கையில் முத்தாய்ப்பாக அவர் குறிப்பிடுவதுதான் கூட்டமைப்பினர் மீதான கடுந்தாக்குதல். தேர்தல் காலங்களில் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்று நடந்து கொள்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றிருக்கிறார்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...