அவதூறு பொழியும் அரசியல்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அலை ஒன்று ஏற்படுவது போன்ற மாயை ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இப்படி தமிழ் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கூட்டமைப்புக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் நிலை எதனால் ஏற்பட்டது?”

இப்படியொரு தூண்டில் கேள்வியை தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தமிழரசுக் கட்சித் தலைவரிடம் வீசி, தங்களது கட்சிக்கெதிரான அலையை ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறது.

முதலில் தெரிவது, இம்முறை தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான அலை எழுந்திருப்பதைக் கூட்டமைப்பு தெரிந்து கொண்டிருக்கிறது என்பதும், அதுகுறித்து வெகுவாகப் பதற்றமுற்றிருக்கிறார்கள் என்பதுமாகும்.

அதற்கான நீண்ட பதிலில், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, “தமிழ்த் தேசத்துக்காக இறுதிவரை போராடிய போராளிகளை நாம் மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறோம்” என்று ஆரம்பித்து, “தீர்வு காண ஏற்ற சந்தர்ப்பம் உருவாகிவரும் இந்நேரத்தில் போராளிகளும் இலட்சியப் பற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்று முடித்திருக்கிறார்.

வெறும் வார்த்தை ஜாலத்தையே இன்னமும் நம்புகின்ற பாமரத்தனத்துடன் தான் இருக்கிறார் மாவை. தேர்தலுக்காக ‘சீற்’ கேட்டுப் போன புலிப் போராளிகளை உங்களிடம் மக்களுக்குச் சேவை செய்யும் உறுதியைக் காணவில்லை என்று அவமானப் படுத்தித் திருப்பி அனுப்பிவிட்டு, இப்போது மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்பது என்ன?

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 44 வேட்பாளர்களில் ஒரு சீற்றைக் கூட முன்னாள் புலிப் போராளிகளாக இருந்தவர்களுக்கு வழங்க எண்ணாமல்… மரியாதை என்ன மரியாதை?

தமிழரசுக் கட்சித் தலைவர் அத்துடன் விட்டுவிடவில்லை. நாசூக்காக, அவர்களில் அரசால் கையாளப்படுபவர்களும் இருப்பதாக ‘இக்கு’ வைக்கிறார்.

“அரசு விரும்பியவாறு புனர்வாழ்வு என்ற பெயரில் அவர்களைப் பயிற்றுவித்தது. அவர்கள் அரசின் கொள்கைகளைப் பின்பற்ற பலவந்தப்படுத்தப்பட்டனர். ஆனாலும் அரசின் பலவந்தத்தை ஏற்று அதன் கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள் என்று நாங்கள் நம்பவில்லை…”

இதன் அர்த்தம் என்ன? அவர்களிடையே உள்ள கறுப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், ‘மரியாதைக்குரிய அவர்கள்’ எல்லோருமே வாக்குகளைப் போட்டு காலகாலமாக உள்ள கூட்டமைப்புத் தலைவர்களை வெல்ல வைப்பதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருக்க வேண்டும் என்கிறாரா?

கூட்டமைப்பில் இப்போது வேட்பாளராகக் களமிறங்கியுள்ளவர்கள் அரசுடன் தொடர்பு வைத்திராதவர்களா? இரகசியமாகப் பெருந்தொகைப் பணத்தைப் பல கூட்டமைப்பு எம்பிக்கள் அரசிடமிருந்து வாங்கிக் கொண்டதாக முதலமைச்சர் அண்மையில் கூட குற்றம் சாட்டினாரே!

பத்திரிகைகளில் தேர்தல் விளம்பரத்திற்காக கூட்டமைப்பு எம்பிக்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கில் இறைக்கிறார்களே… அதெல்லாம் எங்கிருந்து வந்த பணம்? அதை யாரிடமிருந்து வாங்கினீர்களோ அவர்கள் உங்களிடம் கேட்ட கைமாறு என்ன?
குண்டு துளைக்காத காரிலிருந்து மீன்பிடி அமைச்சில் பதவி, பிள்ளைகளுக்கு வெளிநாட்டு ஸ்கொலர்சிப், வியாபாரக் கொந்தராத்துகள் என்று அரசிடமிருந்து அவ்வப்போது பெற்றுக் கொண்டவர்கள்தானே இப்போதும் உங்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள்?

அவ்வளவு ஏன், உங்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவர் குருநாகலில் போட்டியிடச் சென்றது, அங்கே எந்தப் பாசக் கயிறு கட்டி இழுத்ததால் என்பதையும் மக்கள் கதைக்கிறார்களே… நீங்கள் எல்லோரும் அரசின் வாடையோ தென்னிலங்கைக் கட்சிகளுக்கு கடமைப்பட்டோ இருக்காதவர்கள் என்றா புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் மீது அவதூறைப் பொழிகிறீர்கள்?

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...