‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……

தோழர் ‘ஜீவா’ எங்கள் குடும்பத்தின் இனியநட்பிற்குபாத்திரமானவர்.

எனது தந்தை யாழ்ப்பாணத்தில் வேலை செய்த காலங்களில் எனது தந்தையின் நண்பராக ஜீவா இருந்தார். அவரும் நயினாதீவினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததை எனது தந்தை கூறி அறிந்துள்ளேன். எனது சகோதரர் பரராஜசிங்கம் சுன்னாகம் ஸ்கந்தாவில் கல்விகற்ற வேளையில் கட்சித் தொடர்பு, ஜீவா தொடர்பு என விரிந்திருந்தது. அப்போது எனக்கு 15 வயதிருக்கும். ஜீவாவின் ‘தண்ணீரும், கண்ணீரும்’என்றநூலினை நயினாதீவில் விற்பனை செய்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினேன். அதுபோலவே அவரது ‘பாதுகை’ பலத்த வரவேற்பைப் பெற்றது. நான் கல்வி கற்ற மகாவித்தியாலயத்திலுள்ள வாசிகசாலையில் மல்லிகையை வாசனைக்கு வைப்பேன். இவை எல்லாம் எனதுபன்ம வயதின் செயற்பாடுகள்.எமது ஊரில் வருடாவருடம் பாரதிவிழா நடைபெறும். அதில் ஜீவா முக்கிய பேச்சாளராக இருப்பார். நயினையிலிருந்து யாழ். வந்தால் ஜோசப் சலூன் சென்றுதான் ஊர் திரும்புவேன். காலம் செல்லச் செல்ல எமது குடும்பம் யாழ்ப்பாணத்தில் குடியேறி எமது உறவுப் பாலமானது நிரந்தர ஒத்துழைப்பாக மாறியது. அவைநித்தம் சந்திப்பு, கலந்துரையாடல்கள், கூட்டங்கள், விவாதங்கள் எனத் தொடர்ந்தன. மல்லிகையின் அச்சுப் பிழைதிருத்தங்களைச் செய்வது, அவர் அங்கில்லாத வேளைகளில் திரு. சந்திரசேகரத்திடம் பெற்று அப் பணியை தொடர்ந்து நிறைவேற்றிவந்தேன்.

1973ம் ஆண்டுநான் சோவியத் ரஷ்யாவிற்கு கல்வியைத் தொடரச் சென்றபோது அங்குள்ள தமிழ் அறிஞர் பூர்ணிக்காவிடம் ஒருதொகுதி மல்லிகைவெளியீடுகளை அவரது முகவரியிட்டு தந்திருந்தார். நான் அவரைச் சந்திக்கச் சென்றிருந்துபோது அவர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்ததாக துக்கச் செய்தியையே என்னால் பெறமுடிந்தது.

1973 இல் உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ மறைவிற்காக இரண்டுதபால் தலைகளை சோவியத் அரசு வெளியிட்டிருந்தது. அவற்றை எனது கடிதத்துடன் ஜீவாவிற்கு அனுப்பிவைத்தேன். அவரும் எனது கடிதத்துடன் அதனைப் பிரசுரித்திருந்தார். நான் நாடு திரும்பியதும்  மல்லிகைக்குச் சந்தா சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.

ஜீவாவுடனான தொடர்பு எனக்கு இன்னொரு நட்பைத் தந்தது. அவர் வேறுயாருமல்ல. எழுத்தாளர்,விமர்சகர் ஏ. ஜே. கனகரத்ன அவர்களே. எனது இல்லத்திற்கு அண்மையில்தான் பேராசிரியர். ஐகலாசபதி வாழ்ந்தார். இதனால் அவரது உறவும் நெருக்கமாகியது. இதனால் மல்லிகை அச்சால் வெளிவந்ததும் சுடச்சுட அதனை அவரிடம் கையளிப்பது எனது பணியாக இருந்தது. அதேபோன்று தனது ஆக்கங்களை என்னிடம் தந்து நான் அவற்றை ஜீவாவிடம் ஒப்படைப்பதுண்டு. இத் தொடர்புகளின் விரிவாக இலக்கிய கர்த்தா கனகசெந்திநாதன் அவர்களோடும் தொடர்பு ஏற்பட்டது. இந்த இறுக்கமான பிணைப்பிற்கு நட்பு என்பதைவிட எமது இலட்சியங்களே இணைத்து வைத்தனஎனக் கூறினால் மிகையாகாது.

கம்யூ. கட்சி அலுவலகத்திற்குத் தினமும் வருபவர் ஜீவா ஒருவராகத்தான் இருக்கமுடியும். அவரிடம் அழகாக மடிக்கப்பட்ட வெற்றிலைக் கூறு எப்போதும் இருக்கும். இவற்றைச் சுவைபார்ப்பது நான் மட்டுமல்ல. எந்த துர்ப் பழக்கங்களும் அற்றதோழர். வைத்திலிங்கமும் பங்குகொள்வார். ஓய்வுநேரங்களில் எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது சுவாரஷ்யமானது. ஒருமுறை ஜீவா கூறியஅனுபவம் ரசிக்கத் தக்கது.

ஜீவாவும், அவரது நண்பர்களும் வேலைகள் முடிந்து மாலைநேரங்களில் அல்லது வாரநாட்களில் கீரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்களாம். இவர்களில் எழுத்தாளர். எஸ். பொ. மற்றும் சிலர் குளிக்க, வேறுசிலர் குடிப்பார்களாம். ஒருநாள் நல்ல நிலவுநேரம், குடிபோதையிலிருந்தவர்கள் ஆங்காங்கே படுத்துறங்க, இன்னொருவர் சொறிநாயைக் கட்டிப் பிடித்தபடி உறங்குகிறார். அவர் ‘இலக்கியச் சொறி’ எஸ். பொ. என்றார்.

தனது இளமைக் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் போது தனது பொழுதுபோக்காக புறாக்களை வளர்த்துவந்ததாகவும், அழகான, நல்லினபுறாக்களில் தனக்கு மிகுந்தஆர்வம் இருந்தது எனவும் கூறியஅவர், யாழ். கோட்டைக்குள் வாழ்ந்து வந்த பிரித்த்தானிய அரசாளர்களிடம் நல்லின, சொன்னதைச் செய்யக்கூடிய புறாக்கள் இருப்பதாக அறிந்ததால் அவற்றை எப்படியாவது பிடிக்க தனது நண்பர்களுடன் திட்டமிட்டார்கள். இதற்காகஅவர்கள் நடத்தியதிட்டம் மிகவும் சுவைக்கத் தக்கது. தாம் வளர்க்கும் சிலபுறாக்களுக்கு, சக்கரையும்,பயறும் கலந்த உணவு அவற்றின் தொண்டை நிறைய ஊட்டியபின் கோட்டைக்குள் எறிந்துவிடுவார்களாம். ஆவை அங்கு இறங்கியதும் திணித் உணவை கக்கிவிடும். அவற்றை உண்ட கோட்டையிலுள்ள புறாக்கள் இவர்களின் புறாக்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும். இதனால் ஏற்படும் புதிய இன விருத்தி அவற்றை மேலும் வளர்க்க வாய்ப்பாக அமைந்துவிடும் என்றார்.

இந்திய கம்யூ. தலைவர் தோழர். பாலதண்டாயுதம் இலங்கை வந்துபோது பேராதனையில் அவரது சொற்பொழிவு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஆவரை அங்கு சந்திப்பதற்காக ஒரு குழு பேராதனை சென்றது. அக் குழுவில் பேரா. சுpவத்தம்பி, பிரேம்ஜி, ஜீவா, பரராஜசிங்கம், சிவாசுப்ரமணியம் ஆகியோரும் சென்றனர். இவர்கள் கொழும்பில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும், அக் கூட்டத்தின் பின்னர் நாடு திரும்பலாம் எனவும் அவரைக் கேட்டனர். பாராளுமன்றத்தில் முக்கிய மசோதா விவாதத்திற்கு உள்ளதால் தம்மால் நிற்கமுடிவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.  அடுத்தநாள் காலை மல்லிகை அலுவலகத்தில் பேராதனைக் கூட்டம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது இந்திய வானொலியில் வெளியான செய்தி எம்மை அதிர்ச்சிக்குள் தள்ளியது. சென்னையிலிருந்து டெல்கி சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியதாகவும் அதில் முக்கியஅரசியல் தலைவர்களான மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம் ஆகியோரும் அடங்குவர் எனத் தெரிவித்தபோது ஜீவா ஓ எனஅழுதார். தமது வேண்டுகோளை ஏற்று ஒருநாள் தாமதித்திருந்தால் அந்த இழப்பைநாம் தவிர்த்திருக்கலாம் எனக் கூறி மிகவும் மனமுடைந்திருந்தார்.

கட்சியின் செயற்பாடுகளில் நான் தீவிரமாக செயற்பட்ட காலங்களில் உள் முரண்பாடுகள் தோற்றின. நாட்கள் கடந்து செல்ல நானும் நாட்டைவிட்டு வெளியேறினேன். அதன் காரணமாகவே இவற்றை என்னால் அமைதியாக இரைமீட்க முடிந்துள்ளது.

வெளிநாட்டு வாழ்க்கையைத் தொடர்ந்து 2013ம் ஆண்டுநான் வந்திருப்பதாக சிறீதரசிங் ஜீவாவிற்கு செய்தி அனுப்பி ஏற்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இருவரும் பூபாலசிங்கம் புத்தகசாலையில் சந்தித்து ஆரத் தழுவி அழுது தீர்த்தோம்.

என்னைத் தனது அலுவலகத்தி;ற்கு அழைத்துச் சென்ற அவர், தனதுவாசிப்பின் போது பாலதண்டாயுதம் என்றபெயர் வரும் வேளையில் எனது நினைவுகள் தனது மனதில் எழும் எனத் தனதுகனத்த இதயத்தோடு கூறினார்.

எனது குடும்பம் தன்னாலான உதவிகளை மல்லிகையின் வளர்ச்சிக்காக உதவியது. இதுஎங்கள் இலக்கியத் தேசியக் கடன். அதுவே பலரது அனுபவங்களுமாகும். ஜீவாவுடனான பசுமையான நினைவுகள் என்றும் எம்மோடுபயணிக்கும். இந்த மனிதஆத்மா நீடித்த ஆயுளுடன் வாழ எமது வாழ்த்துக்கள்.

நயினை  ந. ஜெயபாலன்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...