அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் ‘துரோகிகள்’ இலங்கையில் சமாதானத்தை விரும்பவில்லை!

சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது.

சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து “சிலோன் டுடே’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களினால் நிதியுதவி அளிக்கப்படுவோர் பௌத்த பிக்குகளுக்கு மதிப்பளிக்காத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் நாட்டில் மத ரீதியான அமைதியின்மையை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“அரச சார்பற்ற தொண்டர் நிறுவன நிதியில் வாழும் துரோகிகளுக்கு தமது வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்ள நாட்டில் அமைதியின்மையை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. நாடு அமைதியாக இருந்தால் அவர்கள் தமது வருமானத்தை இழந்துவிடுவார்கள்’  என்று அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளர். பௌத்த பிக்குகளுக்கு, மத நிந்தனை செய்யும் துரோகிகளுக்கு நிதியுதவி அளிக்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு சில ஊடக நிறுவனங்களும் செயற்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார். பேட்டி வருமாறு;

கேள்வி: பௌத்தர்களின் போர்வையில் தோற்றமளிப்போரும் பௌத்த  அமைப்புகளைச் சாராத சிலரும் சிங்கள சமூகத்தை இனவாத தன்மை மற்றும் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதன் மூலம் இழுத்துவிடுகின்றனர் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இனவாதத்தை வெளிப்படுத்தும் மற்றும் எதிர்ப்புணர்வான பேச்சுகளை மேற்கொள்ளும் பௌத்த பிக்குகளுக்கு எதிரான சூனிய வேட்டையை நடத்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளமை தொடர்பாக தனது எதிர்ப்பையும் தேரர் வெளிப்படுத்தியிருந்தார். பௌத்த சாசன அமைச்சர் என்ற முறையில் மகாநாயக்க தேரரின் அறிக்கை குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்: பௌத்த பிக்குகள் தவறாக நடத்தப்படுதல் அல்லது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. சில தீவிரவாதக் குழுக்கள் விடுத்த அறிக்கைகளை கண்டித்து தேரர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை அரசாங்கம் கண்டித்திருக்கவில்லை.

கேள்வி: பௌத்த பிக்குகளுக்கு அவர்களுக்குரிய மதிப்பை அளிக்காமல் வெறுமனே அவர்களின் பெயரைக் குறிப்பிடும் நடவடிக்கை குறித்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கண்டனம் தெரிவித்திருந்தார். பௌத்த பாரம்பரியத்தில் இது அதிகளவுக்கு கொள்கையற்றதாகும். அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தை மகாநாயக்க தேரர் கொண்டுவந்திருந்தார். புத்தசாசன அமைச்சு நாட்டிலுள்ள சட்ட ஒழுங்குக்கு மதிப்பளிக்காததற்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது?

பதில்: அரசாங்கத்திலுள்ள எவரும் பௌத்த பிக்குகளை வெறுமனே பெயரைக் குறிப்பிட்டு கூறுவதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை. அத்தகைய தவறுகளை அவர்களில் சில மூடத்தனமானவர்கள் இழைக்கின்றனர். அந்த ஆட்களினால் விடுக்கப்படும் அறிக்கைகளையும் ஊடகமும் முன்னிலைப்படுத்துகிறது.

எதனை அச்சிடுவது? எதனை ஒளிபரப்புவது? எதனை ஒலிபரப்புவது? என்பது தொடர்பாக தெரிவு செய்யும் விடயத்தில் ஊடகத்தின் பொறுப்பாக இது அமைந்திருக்கிறது. படிமுறையாக வடிகட்டப்படாமல்  எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்வதற்கான தன்மையை ஊடகம் கொண்டுள்ளது. இன்று கூட ஊடகம் நாஸ்திக தன்மை உடையதாக தோன்றுகிறது. மதத்திற்கோ அல்லது பௌத்த பிக்குகளுக்கோ மதிப்பளிக்காத தன்மை காணப்படுகிறது.

பௌத்த பிக்குகள் தொடர்பாக மதிப்பளிக்காத அறிக்கைகளை விடுப்போரை ஊடகங்கள் பிரபல்யப்படுத்துவது கொள்கையற்றதாகும்.  உண்மையில் சில தீவிரவாதிகள் பௌத்த பிக்குகளை குறிப்பிடும் போது அவர்களின் பெயர்களைக் கூறி அவமரியாதையாக செயற்படுகின்றனர். உண்மையான பௌத்தர்கள் ஒருபோதும் பிக்குகளை அவமதிப்பதில்லை என்பதை நான் அறிவேன். தீவிரவாத அரசியல்வாதிகள் மட்டுமே அவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசுகின்றனர்.

கேள்வி: வண. ஞானசார தேரருக்கு மறைவிடத்தை நீங்கள் வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளீர்கள். அது தொடர்பாக உங்கள் கருத்து? 

பதில்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பை வழங்குவது தொடர்பாக நீதியமைச்சர் மீது குற்றம் சாட்டுவதாக அந்த எண்ணப்பாடு அமைந்திருக்கிறது. அளுத்கம நெருக்கடி மேலெழுந்திருந்தபோது வண. ஞானசார தேரருக்கு பாதுகாப்பை வழங்கியதற்காக நீதியமைச்சராக அச்சமயம் இருந்த ஹக்கீம் மீது நீங்கள் குற்றம் சாட்டினீர்களா? வண. ஞானசார தேரர் கைது செய்யப்படுவதிலிருந்தும் பாதுகாப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் தலையீடு செய்திருந்தாரா? எவருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கான அதிகாரத்தை நீதியமைச்சர் கொண்டிருப்பதில்லை. தீவிரவாதிகள் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை பரப்புகின்றனர். நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிக்க அவர்கள் இதனை மேற்கொள்கின்றனர்.

கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சி என ஐ.தே.க. தன்னைப் பற்றி கூறுகின்றது. கட்சியின் உறுப்பினர் என்ற வகையிலும் புத்தசாசன அமைச்சர் என்ற ரீதியிலும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு நீங்கள் இணங்குகிறீர்களா?

பதில்: அந்தக் குற்றச்சாட்டை நான் முழுமையாக  ஏற்றுக் கொள்ளவில்லை. ஐ.தே.க. எங்கேயும் அவ்வாறு குறிப்பிட்டிருக்கவில்லை. அது இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடும் இல்லை. பௌத்தத்தையும் பௌத்த சாசனத்தையும்  பாதுகாப்பது நாட்டின் பொறுப்பும் தலையாய கடமையாகவும் உள்ளது. அந்தப் பொறுப்பு தனியொரு அரசியல் கட்சி மட்டும் சார்ந்தது அல்ல.

கேள்வி: சட்டத்தரணி ஒருவர் 166 கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் குற்றச்சாட்டுகள் குறித்து விடுத்திருந்த அவரின் அறிக்கை தொடர்பாக தேசத்திடம் மன்னிப்பு கேட்கத் தவறினால் சட்டத்தரணிகள் கழகத்திலிருந்தும் அவரை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுப்பீர்கள் என அண்மையில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள் ஆனால் சட்டத்தரணிக்கு ஆதரவாகவும் உங்கள் அறிக்கையை விமர்சித்தும் பல அமைப்புகள் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தன. ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கும் நீங்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள். இந்நிலையில் சட்டத்தரணியை வழக்கறிஞர்கள் தொழிலிலிருந்து நீக்குவது சாத்தியமானதா? 

பதில்:  அவர் துரோகியாக உள்ளார். அத்துடன் நல்லிணக்க நடவடிக்கைகளை அளிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டவராகவும் இருக்கின்றார். நாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்த அவர் ஆவலுடன் காத்திருக்கின்றார். விலங்குகள் போன்ற மனப்பான்மையுடன் இந்த ஆட்கள் செயற்படுகின்றனர். அவரின் அறிக்கைக்கு எதிராக நான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் சில நாட்களில்  நடவடிக்கைகளை நீங்கள் பார்க்க முடியும்.

கேள்வி: அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவி பெறுபவர்கள் சிங்கள பௌத்தர்களின் குரலை தடை செய்வதற்கு முயற்சிக்கின்றனர் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பாரிய தொகை பணத்தை இலங்கை தொடர்பாக தீமையான பிரதிமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வழங்குகின்றன. இலங்கையிலுள்ள சிறுபான்மை இனக் குழுக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் பெரும்பான்மையினரால் இவ்வாறு செய்யப்படுவதுடன் சித்திரவதைக்குட்படுத்தப்படுவதாகவும்  தீமையான பிரதிமையை ஏற்படுத்துவதில் அவர்கள் ஈடுபடுகின்றனரே?

பதில்:  நிச்சயமாக நாட்டில் தற்போதுள்ள மத ரீதியான அமைதியீனத்திற்கு வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் உதவியுடன் வாழ்வோரே காரணமாவர். சிலர், உதாரணமாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் சட்டத்தரணி, 166 கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.  அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்காக வெளிப்படையாக செயற்படுகின்றார்.

சிலர்  வெளிப்படையாக தோன்றுவதில்லை. ஆனால்  அவர்கள் யாவருக்கும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் நிதியுதவி வழங்குகின்றன. சிறப்பாக கொடுப்பனவு செலுத்தப்பட்டால் எந்தவொரு கோட்பாடற்ற செயற்பாட்டிலும் ஈடுபடுவதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் மதத்தை பின்பற்றுவதில்லை. அல்லது அவர்கள் எந்தவொரு இனக் குழுமத்தையும் சார்ந்தவர்களாகவும் இல்லை. அவர்கள் வேர் மூலத்தைக் கொண்டிருக்கவில்லை. தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய அவர்கள் செயற்படுகின்றனர்.

நாட்டில் நெருக்கடி இல்லாவிட்டால் நாடு அமைதியாக இருந்தால் அந்த தொண்டர் நிறுவனங்கள் தமது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுவார்கள். அவ்வாறு இடம்பெற்றால்  அவர்கள் வாழ்வதற்கான விடயங்களை இழந்துவிடுவார்கள். இந்நிலையில் மத, இன அமைதியீனத்தை தமது உயிர் வாழ்வுக்காக உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அதனாலேயே நாட்டில் அவர்கள் நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றனர். தமது வருமானத்தை தக்க வைப்பதற்காகவே அவர்கள் இதனைச் செய்கின்றார்கள். முன்னைய ஆட்சியிலும் அவர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். முன்னைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் இந்த அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு அவர்களின் பிரசன்னமும் செயற்பாடுகளும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிகரித்துள்ளன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

இந்த தன்னார்வ தொண்டர் நிறுவனத்தின் நிதியுதவியைப் பெறும் துரோகிகள் கமராக்கள், மைக்குகளுக்கு முன்னால் தோன்றுவதை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இந்தப் பிரச்சினை தீவிரமடைவதற்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். எதனைச் செய்ய வேண்டும்? எதனை செய்யக்கூடாது? என்பது தொடர்பான சிந்தனையை ஊடகம் கொண்டிருக்கவில்லை. இந்நாட்களில் எம்மால் ஊடகவியலாளர்களை கண்டுகொள்ள முடியாது. எவராவது எதனையாவது கூறினால் அதனை அறிக்கையிடும் நிருபர்களாக மட்டுமே அவர்கள் உள்ளனர்.

கேள்வி: நல்லிணக்கமானது பௌத்தர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராக அதிக தீவிரமாக கோட்பாடற்ற நகர்வுகளை உருவாக்குவதற்கு இட்டுச் செல்கின்றது என்பது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லையா? அவர்கள்
சிங்கள மற்றும் பௌத்த சமூகத்தின் மீது நல்லிணக்கம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது குறித்து நீங்கள் சிந்திக்கவில்லை?

பதில்: நாட்டில் நல்லிணக்கத்திற்கு நாங்கள் வழிசமைத்துக் கொடுத்த பின்னர் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் பௌத்தர் மற்றும் சிங்கள இயக்கங்களுக்கு எதிரானவர்களும் எந்தவொரு தடையும் இல்லாமல் செயற்பட ஆரம்பித்துள்ளனர். தமது சுதந்திரத்தை அதிகளவுக்கு அவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

மகிந்த ஆட்சியின் நடைமுறைகளுக்கு அமைவாக இந்த அரசாங்கம் செயற்பட்டால் அந்த இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் தாழ்ந்த மட்டத்தில் செயற்பட்டிருக்கும். அவர்களை இந்த அரசாங்கம் நசுக்குவதில்லை.  அவர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. அவர்களின் கட்டுப்படுத்தாத செயற்பாட்டுக்கு இதுவே காரணமாக உள்ளது. நல்லிணக்கத்தின் தகுதியை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமது கோட்பாடற்ற செயற்பாட்டை மேற்கொள்வதற்கு இதனை பயன்படுத்துகின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

கேள்வி: புத்தசாசனத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பௌத்த பிக்குகள் பேசும் போது நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை அவர்கள் ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:  நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளை நாங்கள் தரம் தாழ்த்துவதில்லை. தீவிரவாத தன்னார்வ தொண்டர் நிறுவனங்களுடன் இணைந்தவர்களே  பிக்குகளையும் பௌத்தர்களையும் நசுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் ஊடகங்களின் முன்னால் தோன்றி பௌத்த பிக்குகளை நிந்திக்கின்றனர். அரசாங்கத்திலுள்ள எவரும் பௌத்த பிக்குகளை நிந்திப்பதில்லை.

கேள்வி: தமது அரசியல் நிலைப்பாடு எவ்வாறாக இருந்தாலும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டிருந்தனர். பௌத்த பிக்குவுக்கு எதிராகவும் பிக்குவைக் கைது செய்யுமாறும் தமது நடவடிக்கை தொடர்பாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அவர்களைத் தெரிவு செய்வதற்கு சிங்கள பௌத்தர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?

பதில்:  பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கும் போது இனக்குழுவொன்றைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு அதற்கு முகம் கொடுக்கின்றனர். அவ்வாறு செய்வதற்கான நுண்ணறிவை எமது சிங்கள அரசியல்வாதிகள் கொண்டிருக்கவில்லை. சிங்களவர்கள் மத்தியிலுள்ள இந்த ஐக்கியமின்மை இனவாத பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு காண முடியாதிருப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

கேள்வி: பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்படவிருக்கும் போது பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவது சாதாரண மக்களைப் பொறுத்தவரை பொருத்தமானதாக இருக்காத நிலையில் சங்காதிகரண (பிக்குகள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் பௌத்த நீதிமன்ற முறைமை)  முறைமையை அறிமுகப்படுத்த வேண்டுமென நீங்கள் சிந்திக்கவில்லையா?

பதில்: இலங்கை போன்ற பௌத்த நாடொன்றுக்கு சங்காதிகரண தேவைப்படுவதாக நான் அபிப்பிராயம் கொண்டுள்ளேன். சங்காதிகரணவை நடைமுறைப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. நாட்டிலுள்ள மகா சங்கரத்னவின் அங்கீகாரத்தை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. பௌத்த பிக்குகள் அதற்கு இணங்கினால் அதனை நடைமுறைப்படுத்த முடியும்.

கேள்வி: ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு ஆள் திரட்டுபவர்கள் இலங்கையை இலக்கு வைத்திருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து நீங்கள் அதிகளவில் பேசியிருந்தீர்கள். இந்த புதிய கண்டுபிடிப்பு தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு ஆள் திரட்டுவோரினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பின் மதத்தை பொருட்படுத்தாமல் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது. நாட்டில் பயங்கரவாதிகள் செயற்படுவதற்கு எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்காது.

கேள்வி: கோட்பாடற்ற விதத்தில் நாட்டில் மதமாற்றம் இடம்பெறுவதை புத்தசாசன அமைச்சர் என்ற முறையில் நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? அதனை கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்கவுள்ளீர்களா?

பதில்: கோட்பாடற்ற முறையில் மதமாற்றம் நாட்டின் பாரியளவில் இடம்பெறவில்லை. நாட்டில் இடம்பெறும் கோட்பாடற்ற மதமாற்றம் தொடர்பாக கிறிஸ்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வாதிகள் சாதாரண கிறிஸ்தவர்களை மதம் மாற்றுகின்றனர். பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு அதிகளவில் மாற்றப்படவில்லை.

கேள்வி: குரகல, தேவானகல, முகுது மகா விகாரை, தீகவாபி  போன்ற பௌத்த இடங்கள் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த பௌத்த இடங்களுக்கு இப்போது அவர்கள் உரிமை கோருகின்றனர். கிழக்கு மாகாணத்திலுள்ள பௌத்த தொல்பொருளியல் இடங்கள் பல முஸ்லிம் குடியிருப்பாளர்களால் அழிக்கப்பட்டுள்ளன. பௌத்த தொல்பொருளியல் இடங்களை பாதுகாப்பதற்கு எந்தவொரு யோசனையையும் நீங்கள் முன்வைத்துள்ளீர்களா?

பதில்: அந்த விடயதானம் எனது அமைச்சின் கீழ் வரவில்லை. வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் இடங்கள் பலவற்றுக்கு நான் பயணம் மேற்கொண்டிருந்தேன்.
சர்ச்சைக்குரியவையாக அவை  இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பௌத்த தொல்பொருள் இடங்கள் அழிவடைவது குறித்து ஜனாதிபதிக்கு நான் தெரிவித்திருந்தேன்.

தொல்பொருளியல் திணைக்கள ஆணையாளரிடம்  பௌத்த தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை கூறியிருந்தார். அந்த இடங்களைப் பாதுகாக்க சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2,000 உறுப்பினர்களை நாங்கள் நகர்த்தியுள்ளோம். கடந்த 40 வருடங்களாக பௌத்த தொல்பொருளியல் இடங்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.  அவற்றைப் பேணிப் பராமரிக்க தொல்பொருளியல் திணைக்களமும் எதனையும் செய்திருக்கவில்லை.

கேள்வி: சர்ச்சைக்குரிய மல்வான பங்களாவை சுவீகரிப்பதற்கு என்ன காரணம்? அந்த பங்களா பசில் ராஜபக்ஷவுக்கு முன்னர் சொந்தமாக இருந்ததாக கூறப்பட்டதே?

பதில்:  இந்த விடயம் குறித்து நான் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தேன். அந்த சொத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த பங்களாவை
சட்ட மாணவர்களுக்கான பயிற்சி நிலையமாக மாற்றும் நோக்கத்தை நாங்கள் கொண்டிருந்தோம்.  அந்தக் கட்டிட வளாகத்தின் ஒரு பகுதியில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியை அமைப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...