புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – சுமந்திரன்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறான உண்மைகளை தெரிவித்தால் தம்மை தேசத்துரோகிகள் என கூறுவார்கள் என்ற அச்சத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் இவை குறித்து வாய் திறப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (22)  உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது முற்றிலும் உண்மையானது. எமது மக்களுக்கும் அது நன்றாகவே தெரியும். அதனை யாராலும் மறுக்க முடியாது. உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

இதன் மூலமே நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக்க முடியும். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் படையினரால் மாத்திரம் இடம்பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தமிழ் ஆயுத குழுக்களுக்கும் தொடர்பிருக்கின்றது. இது தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

காணாமல் போனவர்கள் தடுப்பு காவலில் இல்லை. அவர்களை கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். அல்லது அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என அறிக்கை விடுவது போதுமான ஒன்றல்ல.

இது முறையாக அமையாது. பாதுகாப்பு தரப்பனர்களிடம் சரணடைந்த பலர் காணாமல் போயுள்ளனர். எனவே, அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் கட்டாயம் பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்களுக்கு ஏனைய தரப்பினர்களும் பொறுப்பு கூற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

x

Check Also

infographics