வருங்காலம் மாறட்டும்!

தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தெற்கில் மும்முனைப் போட்டியே இருக்கும் என்று எண்ணியிருந்த நிலை மாறி, இருமுனைப் போட்டிதான் என்கிற சடுதியான மாற்றம் உருவாகியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவைத் தவிர்த்துப் போட்டியிடும் என்ற நிலை இருந்தபோது, ஒப்பீட்டளவில் அதுவே இனவாதம் குறைந்த தரப்பாக பார்க்கப்பட்டது.

இப்போது பழையபடி எதிரெதிராக உள்ள இருதரப்புமே இனவாதத்தைத் தூக்கிப் பிடிப்பவையாக அமைந்துவிட்டன. ஒட்டுமொத்த நாட்டுக்கு இது துரதிர்ஷ்டமான நிலைமைதான்.
ஏனெனில், அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறவர்களுடன் தமிழ்த் தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக இந்த நாட்டில் இனவாதப் போக்கை மேலும் வளர்த்தெடுத்துச் செல்லும் விதத்தில் நிலைமைகளைப் பாழ்படுத்தவே செய்யும் என்பதை இப்போதே ஊகிக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனப்பிரச்சினையில் சாதகமான போக்கைக் கொண்டிருக்கிறார்@ தேர்தலின் பின்னரும் அவரே ஜனாதிபதியாக இருப்பார் என்பதால், தீர்வைப் பெற்றுக் கொள்வோம்” என்றே தேர்தல் வாக்குறுதியைத் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் ரணிலுக்கோ மகிந்தவுக்கோ தான் பெரும்பான்மை இருக்கப் போகிறது என்கிற இன்றைய மாற்றச் சூழ்நிலையில், மைத்திரியிடம் தீர்வைப் பெற்றுக் கொள்வோம் என்பதெல்லாம் கூட்டமைப்பே நம்ப முடியாத சங்கதி என்பது தெளிவு.
மகிந்த வந்தால் கூட்டமைப்பினர் இனவாத எதிர்ப்பரசியலைத் தீவிரப்படுத்தி தீர்வுப் பேச்சைக் கைவிடுவார்கள்@ ரணில் வந்தால் தங்களுக்கு வேண்டிய சலுகைகளைப் பெறும் இணக்க அரசியலைச் செய்துகொண்டு தீர்வுப் பேச்சைக் கிடப்பில் போடுவார்கள் என்பது தெரிந்ததே.

தெற்கு நிலைமை இப்படியென்றால், வடக்கில் இம்முறை பலமுனைப் போட்டி நிலவும் என்றே தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டு வருகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இம்முறை தனித்துப் போட்டியிடும் என்று தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெற்குக் கூட்டில் இம்முறை போட்டியிடாது என்று தெரிகிறது. மேற்சொன்ன மூன்று கட்சிகளையும் தவிர்ந்த இதர தமிழ்க் கட்சிகளை இணைத்து இன்னொரு தமிழ்க் கூட்டமைப்பாகவோ அல்லது தனித்தோதான் போட்டியிடும் என்று பேசப்படுகிறது.

எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இன்னொரு தரப்பாக வடக்கு தேர்தல் களத்தில் இருக்கிறது.

இந்த ஐந்து கட்சிகளையும் தவிர, ஆறாவதாக ஒரு கட்சியும் இந்தத் தேர்தலுக்கு உதயமாகியிருக்கிறது. முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை அமைத்திருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் த.தே.கூ தனது வேட்பாளர் பட்டியலில் தலா இரண்டு போராளிகளையாவது இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இல்லாவிட்டால், தனித்தோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்தோ அவர்களும் போட்டியிடக் கூடும் என்றே தெரிகிறது.
மொத்தத்தில், தமிழ்மக்கள் பலகட்சி ஜனநாயக முறையினை மதித்து இந்தத் தேர்தலை எதிர்கொள்வதானது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கக் கூடிய விஷயம் என்பதில் ஐயமில்லை.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...