மீண்டும் கேட்கிறார் சுரேஷ்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

இந்த நாட்டின் பிரதமர் பதவியையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று முழங்கவும் அவருக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் அத்தனை ஆசனங்களையும் வென்றால் தாங்கள் செய்யக்கூடியது என்ன என்று அவர் விளக்குவதுதான் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலின் ஊடாக கிடைக்கும் ஆதரவு மூலம் தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதார நலன் சார்ந்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு வலுச்சேர்க்க முடியும்” என்று சுரேஷ் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதார நலன் சார்ந்து உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடந்த ஆறு வருடங்களாக தாங்கள் மேற்கொண்ட பணிகளைச் செய்தியாளர்களிடம் அதன்பிறகு வரிசைப்படுத்திச் சொல்வார் என்று பார்த்தால்….
ஊஹ_ம்… அவை பற்றி அவர் எந்த குறிப்பும் தரவில்லை.

இதுகாலவரையான தேர்தல்களில் எல்லாம் பெரும்பான்மைப் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் அல்லது அதற்கான என்ன சிறு நகர்வைக் காண்பித்திருக்கிறார்கள் என்பதைச் சொன்னால்தானே, அவர்கள் இதுவரையும் செய்த எதற்கு, எப்படி இனி வலுச் சேர்க்கப் போகிறார்கள் என்றெல்லாம் நாங்கள் விளங்கிக் கொள்ள முடியும்?

தமிழ் மக்களுக்கான உரிமைகளைப் பெறக்கூடிய அந்தத் தீர்வுக்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் எந்தவொரு ஆரம்பமும் நடந்ததாகத் தெரியவில்லை.
மாறாக, 2012-ல் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தேர்தல் முடிந்தவுடன் சர்வதேசம் வந்திறங்கும்@ தமிழர்க்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று கூட்டமைப்பின் தலைவர் முழங்கினார்.

தமிழ் மக்கள் ஒற்றுமையைக் காட்டினார்கள்@ சர்வதேசம் வந்தது, போனது@ அதன்பிறகும் சிங்கள அரசாங்கம் தீர்வை வைக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, தீர்வுக்கு எந்தப் பேச்சும் நடக்கவில்லை.
2013-ல் வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போதும், சர்வதேசம் வந்திறங்கித் தீர்வைத் தர, வாக்குகளில் ஒற்றுமையைக் காட்டும்படி கேட்டார்கள். தமிழ் மக்களும் மூச்சுப் பிடித்து ஒற்றுமையைக் காட்டினார்கள்.

இந்தியாவிலிருந்து ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து போனார்கள். இங்கிலாந்திலிருந்து கமரூன் வந்தார். அமெரிக்கா, ஆபிரிக்காவில் இருந்தெல்லாம் பலரும் வந்தார்கள் போனார்கள்….

“இலங்கை அரசே தீர்வை வை” என்று இவர்கள் அதன்பிறகும் ஈனஸ்வரத்தில் சொல்லிக் கொண்டுதானிருந்தார்கள்.

2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் வந்தது. “மாற்றத்திற்கு வாக்களித்தால் 2015-ல் நிச்சயம் தீர்வு… மைத்திரியுடன் கதைத்தாயிற்று… சந்திரிகாவுடன் இரகசிய ஒப்பந்தம் எழுத்தில் வேண்டாம், வாய்ப்பேச்சே போதும் என்றுவிட்டோம்… தீர்வுக்காகவே தேசிய நிறைவேற்று சபை” என்றெல்லாம் மேடைகளில் சொன்னார்கள்.

தேசிய நிறைவேற்று சபை வந்தது. ஆனால் தீர்வு குறித்துதான் இவர்கள் எதுவுமே கதைக்கவில்லை.

இந்த “வழவழா” பணிகளுக்குத்தான் மேலும் வலுச் சேர்க்க, இந்தப் பொதுத் தேர்தலிலும் தமிழ் மக்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டுமாம்!

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...