புலிகளை விற்கத் தடை வந்தது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதை மேலும் விளக்கி, முன்னாள் விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, முன்னாள் விடுதலைப் புலிகளும் தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியாகவும் பரிணமித்திருப்பவர்களுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய அவரது அலட்சியத்தில், ஏக சக்ராதிபத்தியத் தலைமையாகத் தம்மைக் கருதிக் கொள்ளுவதின் அகங்காரம் வெளிப்பட்டு விடுகிறது.

தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த முன்னாள் விடுதலைப்புலிகள், தமிழ் மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற உறுதிப்பாடு மட்டுமே அவர்களிடம் இருந்தது என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.
இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அளித்த “தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய உறுதிப்பாடுகளில்” ஏதேனும் ஒரு சிறு நகர்வுதானும் நடந்ததுண்டா?

அல்லது தமிழ் மக்களின் உடனடித் தேவைகள் எவற்றையேனும் நிறைவேற்றியதாக கூட்டமைப்பினர் செய்த ஒரேயொரு செயலைத்தன்னும் சொல்ல முடியுமா?
(புலம்பெயர்ந்தவர் அனுப்பிய காசில் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு கொப்பி பென்சில்கள் வழங்கியதையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்பிக்களால் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களைத் திறந்துவைக்க ஓடியோடிப் போனதையும் தவிர…)

இந்த லட்சணத்தில், தங்களைத் தவிர மற்றவர்கள் யாரிடமும், மக்களின் எதிர்காலம் மற்றும் உடனடித் தேவைகள் பற்றிய கரிசனத்தைக் காணவில்லை என்று கவலைப்பட்டு, “உங்களுக்கெல்லாம் எம்பிக்களாக வர எந்தத் தகுதியுமில்லை” என்பதாகத் தீர்ப்புச் சொல்லித் துரத்திவிட்டிருக்கிறார் கூட்டமைப்புத் தலைவர்.
கூட்டமைப்புத் தலைவர் இப்படியென்றால், தன்னைத் தேசியத் தலைவர் “பார்ட்-ரூ”வாகப் பாவித்துக் கொண்டிருக்கும் முன்னாள் எம்பி, “குப்பி கடிக்காமல் விட்டு உயிர் பிழைத்திருப்பவர்களை எல்லாம் போராளிகளாகவே கணக்கிலெடுக்க முடியாது” என்று தன் நாட்டாமைத் தீர்ப்பை அடித்துவிட்டிருக்கிறார்.

சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் முன்னாள் புலிப்போராளிகளையும் வெகு சுளுவாக துரோகிகள் லிஸ்டில் சேர்த்துவிடுகிறார் இந்த செஞ்சிலுவைச்சங்க வாகனத்தில் தப்பியோடிவந்த சவடால் பேர்வழி!
எல்லா “மாவீரப் போற்றுகைகளும்” செத்தவர்களுக்கும் செத்தாரைப் போலத் திரிபவர்களுக்கும் தான் இவர்கள் தருவார்கள்.

“தேர்தலுக்குத் தேர்தல் எங்கள் பேரை விற்று எம்பியாகிப் பிழைக்கிறீர்களே… விடுங்கள் நாங்களே எம்பிக்களாகி ஏதாவது செய்ய முடியுமா பார்க்கிறோம்…” என்று அவர்களே இறங்கி விட்டால் எப்படி வெலவெலத்துப் போகிறது பாருங்கள் இந்த ஏமாற்றுக் கூட்டம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் மேடைகள் இம்முறை மாவீரர் புகழ்பாடும் உணர்ச்சிகர ஏமாற்று வசனங்களைப் பொழிய முடியாமல் சோபையிழக்கப் போகின்றன என்பதுதான் சோகம்!

மாறாக, உதிரிகளை அதாவது முன்னாள் புலிப்போராளிகளையும், அனந்தி சசிதரனையும், கஜேந்திரகுமார் அணியினரையும் மாறிமாறிக் கரித்துக்கொட்டும் ‘மேளச்சமா’ மட்டும்தான் தமிழ் மக்களுக்கு இம்முறை கிடைக்கப்போகும் அதிகபட்ச விறுவிறுப்பு!

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...