தமிழொற்றுமையின் பெறுபேறு என்ன?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 42 நாட்களே உள்ளன. எப்படியும் தமிழொற்றுமையைக் காட்டிவிட வேண்டும்@ இல்லையென்றால் சிங்களவர்கள் எங்களைக் கிள்ளுக்கீரையாக நினைத்து விடுவார்கள் என்று கருதியே இதுகாலவரை தங்கள் வாக்குகளைப் போட்டுவரும் பெரும்பான்மைத் தமிழ் வாக்காளர்களின் சிந்தனைக்கு சில விஷயங்களை சொல்லலாம்.

சிங்கள அரசை எதிர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், சர்வதேச ஆதரவைப் பெற்று தனிநாட்டுக்கு நிகரான தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் நாங்கள் (தமிழ்மக்கள்) இருந்தவரை, ஒற்றுமையைக் காட்ட ஏகப்பிரதிநிதியாக ஒரு கட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தது.

இன்றைய நமது சூழலும் சர்வதேச நிலைப்பாடும் அவ்வாறு இல்லை என்பது தெளிவானது. 13க்கு மேலும் சில அதிகாரங்களைச் சேர்த்து வலுப்படுத்திக்கொண்டு, அதன் நடைமுறையின் ஊடாக நமது அரசியலுரிமைகளை படிப்படியாக நிறைவாக்கிக் கொள்ளுதலே இன்றைய நிலையில் நாம் எமது தீர்வுக்குச் செல்லும் வழி. சர்வதேசமும் இதைத்தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வருகிறது.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் குறிப்பிடத்தகுந்த சில தரப்புகளையேனும் நியாயபூர்வமானது என்று ஒப்புக்கொள்ள வைக்கும் தீர்வுத்திட்ட நகலொன்றைத் தயாரித்து வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு இன்று தமிழ்த் தரப்பிடம் உள்ளது.
அதை முன்வைத்து, அரசுடனும் இந்த நாட்டின் சிங்கள மற்றும் ஏனைய இனச் சமூகங்களுடனும் தமிழ்த் தரப்பினராகிய நாம் பேசிப் புரிந்துணர்வுக்குக் கொண்டுவருவதன் மூலமும், அதனை வலியுறுத்த மக்களைத் திரட்டி ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமும் தான் நாம் இங்கு தீர்வைச் சாத்தியமாக்க முடியும்.

உள் முரண்பாடுகளை முற்றிய நிலையில் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏகப்பிரதிநியாக வைத்திருந்து இது சாத்தியமாகாது. தனிநாட்டுக்குக் குறைந்த எதைச் சொன்னாலும் ஒருவர் மற்றவரைத் துரோகியாகக் காட்டிவிட முயலும் கூட்டினால் சாத்தியபூர்வ தீர்வொன்றைச் சொல்லவே முடியாது.

தமிழ்த் தரப்பில் பலகட்சிகள் இணைந்து பேசி அதில் பெரும்பான்மையானவர்கள் இணங்கிய ஒரு பொது முடிவுக்கு வருவதே இன்று இந்த நாட்டில் சாத்தியமாகக் கூடிய தீர்வை வெளிப்படுத்துவதற்குரிய வழி.

இதற்கு, கூட்டமைப்பின் உள்ளேயே தீர்வு பற்றிய முரண்பட்ட கருத்துநிலைகளை வெளிப்படுத்தும் பல்வேறு தரப்புகளும் தனித் தனிக் கட்சிகளாகவும் வெளியே உள்ள கட்சிகளும் சமஅளவில் இணைந்து பேசினால் துணிச்சலாக ஒரு தீர்வுத் திட்டத்தை வடிவமைத்து வெளிப்படுத்த முடியும்.

அதற்கு தமிழ் மக்கள் தமிழ்த் தரப்பினுள் பலகட்சி ஜனநாயக முறையினை வலுப்படுத்துவதற்கு முன்வரவேண்டும். தீர்வு பற்றி துணிச்சலான முடிவுகளுக்கு வருவதற்கு தமிழ்ச் சூழலில் பன்மைத்தன்மை அவசியமாகிறது. ஏகப் பிரதிநித்துவத்தால் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கும் முட்டுக்கட்டை நிலைமையை தமிழ்மக்கள் உணரவேண்டும்.

அரசாங்கமும் சர்வதேசமும் ஏமாற்றுகிறார்கள், எதையும் செய்கிறார்களில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்குப் பதிலாக பல்வேறு வாய்ப்புகளையும் பரிசீலிப்பதற்கு ஏதுவாக தமிழ் மக்கள் பல கட்சிகளையும் தெரிவுசெய்து விடவேண்டும்.

இம்முறையும் புதிய தடங்களைப் பற்றி யோசிக்காமல் பழையபடி தமிழொற்றுமையைக் காட்டிவிட்டுச் சும்மா இருந்தால் போதும் என்றே தமிழ் மக்கள் செயற்படுவார்களாயின், தமிழ் மக்களுக்கு தீர்வில் எல்லாம் அக்கறை இல்லை என்று சொல்வோரின் வாதமே சரி போலும் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும்.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...