கூட்டமைப்பின் ‘கோமாளி’ முகங்கள்!

தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்கள் எல்லாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளைப் போட வேண்டும் என்று கேட்கிறார்கள் கூட்டமைப்பினர்.
கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் என்ன மாதிரியானது என்ன குணவிசேசங்களைக் கொண்டது என்று யாருக்காவது விளங்கப்படுத்திச் சொல்ல முடியுமா?

கூட்டமைப்பிலுள்ள யாருடைய தமிழ்த் தேசியத்தை கூட்டமைப்பின் தமிழ்த் தேசியமாய் கருதுவது?

“மைத்திரி – ரணிலுடன் கதைத்துத் தீர்வை எடுக்கப்போகிறோம்” என்கிற நல்லிணக்க அரசியலின் பாதைதான் இன்று தமிழ்த் தேசியத்தின் பாதை என்பதாக அடையாளப்படுத்துகிறார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்.ஆனால், குறிப்பாக சுமந்திரன் துரோகப் பாதையில் போகிறார் என்றும், தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகளை ஒருபோதும் சிங்களக் கட்சிகளால் விட்டுத்தரவே முடியாது என்றும், அது இன்னும் பல தேர்தல்களுக்கு சர்வதேசத்துக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் ‘நீண்ட பயணம்’ நடக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அகிம்சைப் போராளிக்கு அகிம்சைப் போராளியாகவும் ஆயுதப் போராளிக்கு ஆயுதப் போராளியாகவும் வாயால் மாறிமாறி வடிவமெடுக்கக் கூடிய மாவையாரின் அறிக்கைகளோ தமிழ்ச் சமூகத்தின் அறிவு மட்டம் இன்னும் தனது மட்டத்திலேயே இருப்பதாக நினைத்துக்கொண்டு, தமிழ்த் தேசியம் என்பது கழுத்து நரம்புகள் புடைக்க எதையாவது அவ்வப்போதைக்கு முழங்குதல் என்று நாளும் பொழுதும் சிங்கள அரசுக்குச் சவால்களை வெளியிட்டு வருகிறார்.

செல்வமும் சித்தார்த்தனும் அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகங்கள் போல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தமிழ்த் தேசியத்தினுள் என்னென்ன மாதிரியான ‘ஐட்டங்கள்’ அடங்குகின்றன என்று சரிவரப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக, ‘ஙே’ எனப் பின்தொடர்கிறார்கள்.

சீமானுக்குப் போட்டியாக இங்கே “தேசியத் தலைவர் பார்ட் ரூ” நடித்துக் கொண்டிருக்கக் கூடிய சிவஞானம் சிறீதரனோ, கூட்டமைப்பிலுள்ள மற்றவர்கள் யாரும் அசல் தமிழ்த் தேசியவாதிகள் ஆகமுடியாது என்ற உண்மையை தனது இணையத்தளங்கள் வழியாக நிறுவியபடி இருக்கிறார்.

இப்போதும் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தேசியத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டாத கூட்டமைப்பு உறுப்பினர்களை எப்படித் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாகச் சொல்லமுடியும்? என்ற அவரது அடிப்படைக் கேள்விக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே எவருக்கும் பதில் சொல்லத் திராணியில்லை.
தெற்கின் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்துவ அட்டையை இப்போதும் தம்வசம் கொண்டிருக்கக் கூடிய, தமிழ்க் கூட்டமைப்பின் பத்திரிகையை நடத்தும் நபர்கூட விறுவிறுப்புச் செய்திகளுடாக ஒருவகை ‘வீரமிகு’ தமிழ்த் தேசியத்தை மக்களுக்குப் புகட்டிக் கொண்டிருக்கிறார்.

நம் சிவாஜிலிங்கமும் ஒருவகைத் தமிழ்த் தேசியத்தின் வீரனாகத்தான் மாகாண சபைக்குத் தெரிவானார் என்பதை மறுக்க முடியாது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவின் வெற்றிக்கு உதவுவதற்கு, இந்தியாவிலிருந்து “அவரது மொடல்” தமிழ்த் தேசியம் ஏராளம் பொருட்செலவில் இறக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது கூட, குருநாகல் வரை சென்று தமிழ்த் தேசியத்தை வீறுடன் முழங்குவதன் மூலம் மறுதலையாக சிங்கள தேசியத்தின் வெற்றிக்கு மட்டுமே உழைக்கக்கூடிய கடமை உணர்வுமிக்க “வாங்கின காசுக்கு கூவும்” தமிழ்த் தேசியம் அது!
கூட்டமைப்பின் எந்தத் தமிழ்த்தேசிய ‘மொடலுக்கு’ தமிழ்மக்கள் வாக்களிப்பது?…. இந்த எல்லாத் தேசியங்களையும் அப்படியே ‘பலன்ஸ்’ பண்ணிப் போய்க் கொண்டிருப்பதுதானே அவர்களது ஒரே அரசியல்!

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...