ஏமாற்றுக்காரர்களின் பதற்றம்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகள், பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்துவது என்னும் முடிவோடு ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற ஒரு கட்சியைத் துவக்கியிருக்கிறார்கள்.

அவர்கள் ஜனநாயக நடைமுறைகளில் எந்தளவுக்கு நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள், பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியபூர்வமான என்ன வழித்தடத்தை வைத்திருக்கிறார்கள், தமிழ் மக்கள் மத்தியில் இப்போது இருக்கும் கட்சிகளை விட வித்தியாசமான – மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய – என்ன செயற்பாட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.
உடனடியாகவே கூட்டமைப்பினரைப் பதற்றத்திற்கு உள்ளாக்கியிருப்பதே அவர்களது முதல் சாதனை என்று தோன்றுகிறது.

இவர்கள் சுத்தமான புலிகள் இல்லை என்றும் கருணா, பிள்ளையான், கேபி போல மற்றும் சில துரோகப் புலிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் கட்சிதான் என்பது போலவும் தற்போது ‘அசல்’ புலியாக தன்னைக் கருதிக்கொள்ளும் சுரேஷ் பிரேமச்சந்திரன் முதல் பதற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

பிரபாகரனே மறுபடி வந்து இவர்களுக்கு எதிராகத் தேர்தலில் நிற்க முற்பட்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கே துரோகம் செய்தவர் அவர்தான் என்றும், புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் தாங்கள்தான் என்று கூட்டமைப்பினர் சொன்னாலும் சொல்லக் கூடும்.

புலிகள் அமைப்பில் இருந்து இறந்து போனவர்களை மட்டும்தான் விடுதலைப் புலிகள் என்று கூட்டமைப்பினர் ஒத்துக்கொள்வார்கள். ஏனெனில், அவர்களை வைத்துத்தான் மக்களிடம் வாக்குக் கேட்டு இவர்களால் பிழைப்பு நடத்த முடியும்.

உயிரோடு இருக்கும் புலி உறுப்பினர்கள் அனைவருக்குமே இவர்களின் “மாவீரர் போற்றுகை” வண்டவாளங்கள் தெரியுமென்பதால், அவர்கள் வாய்திறப்பதற்கு முன் அவர்களைத் துரோகிகளாய்க் காட்டிவிடத்தான் கூட்டமைப்பினர் முயற்சிப்பார்கள். அதுதான் இப்போது நடைபெறுகிறது.

கைதிகளை விடுவிக்க என்ன செய்தீர்கள்? மீண்டு சமூகத்துடன் இணைந்திருக்கும் புலி உறுப்பினர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக என்ன செய்தீர்கள்? இறந்த புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அல்லாடுகின்றனவே கவனித்தீர்களா? கணவனை பிள்ளைகளை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விதவைகள் வாழ்வுக்கு என்ன செய்தீர்கள்? என்றெல்லாம்தான் அவர்கள் கேட்கிறார்கள்.

விடுதலைப் புலிகளை வெறும் வாக்குகளுக்காகப் புகழ் பாடிவரும் நீங்கள், அந்த அமைப்பிலிருந்து இன்று உயிருடனிருப்பதால் அல்லல்களையும் அவமானங்களையும் எதிர்கொள்பவர்களுக்கு தலைவர்களாக இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள்.

குற்றவுணர்வும், தேர்தல் பிரச்சாரத்தில் இடிவிழப் போகிறதே என்பதும் கூட்டமைப்பினரை இப்போது பதற்றத்திற்குள்ளாக்குகிறது.

போதாக்குறைக்கு, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்க் கிராமங்கள் சிலவற்றைச் சொல்லி அவையெல்லாம் எங்கிருக்கின்றன தெரியுமா? அங்குள்ள மக்கள் படும் கஷ்டங்கள் ஏதாவது தெரியுமா? போரின் பின் வாழ்வில் இடிவிழுந்து கிடப்போரைச் சென்று பார்த்திருக்கிறீர்களா? என்றும் அந்த முன்னாள் போராளிகள் கேட்கிறார்கள்.
இறந்த மாவீரர்களைச் சொல்லி வாக்குகளை அள்ளலாம் என்றால், உயிரோடு இருப்பவர்களை ஞாபகப்படுத்தி, உணர்ச்சி வசன அரசியலுக்கு உலை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்ற பயம்தான் கூட்டமைப்பினரைப் பதற்றப்பட வைக்கிறது.

இந்த ஏமாற்றுக்காரர்களை இனங்கண்டுகொண்டு விலக்கவில்லை என்றால், நமக்கு எந்த விமோசனமும் இங்கு வரப்போவதில்லை என்பதுதான் உண்மை.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...