பிரான்சில் மே 7–ந் தேதி 2–வது சுற்று அதிபர் தேர்தல்!

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் 2–வது சுற்று தேர்தல் மே 7–ந் தேதி நடக்கிறது.

பிரான்ஸ் அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டேயின் பதவி காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில் அதிபர் ஹாலண்டே போட்டியிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு இருந்தது. ஆனாலும் தான் 2–வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அவர் அறிவித்து விட்டார்.

இதையடுத்து பிரான்ஸ் அரசியல் களம் சூடுபிடித்தது.

தேசியவாத வலது சாரி கட்சியின் மாரீன் லீ பென், ‘என் மார்ச்’ என்னும் கட்சியின் வேட்பாளர் இமானுவல் மேக்ரன், பழமைவாத தலைவர் பிராங்கோயிஸ் பிலான், இடது சாரி வேட்பாளர் ஜீன் லுக் மெலன்கோன், ஆளும் சோசலிச கட்சியின் பினோய்ட் ஹாமோன் உள்பட 11 பேர் அதிபர் தேர்தல் களத்தில் குதித்தனர்.

பிரான்ஸ் நாட்டின் தேர்தல் முறையை பொறுத்தவரை முதல் சுற்றில் ஒரு வேட்பாளர் 50 சதவீத ஓட்டுகள் பெற்றுவிட்டால் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். இந்த சதவீதம் எந்த வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை என்றால் 2–வது சுற்று தேர்தல் நடைபெறும். அதன்படி முதல் சுற்று தேர்தலில் முதல் 2 இடங்களைப் பிடிப்பவர்கள் அதிபர் தேர்தலுக்கு நேரடியாக மோதுவார்கள்.

நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள சுமார் 4 கோடியே 7 5 லட்சம் 82 183 வாக்காளர்களில் 3 கோடியே 7 0 லட்சத்து 03 ஆயிரத்து 728 பேர் ஓட்டுப் போட்டனர். இது 77,77 சதவீத ஓட்டுப் பதிவு ஆகும்.

ஓட்டுப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் யாருக்கும் அதிபர் பதவிக்கு தேவையான 50 சதவீத ஓட்டுகள் கிடைக்கவில்லை. அதே நேரம் பிரான்சில் 60 ஆண்டு காலம் கோலோச்சி வந்த சோசலிச மற்றும் பழமைவாத கட்சிகளுக்கு பலத்த அடி கிடைத்தது. இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் மிகக் குறைவான சதவீத வாக்குகளை பெற்று பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

கடந்த ஆண்டு ‘என் மார்ச்’(எழுச்சி) என்னும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி போட்டியிட்ட முன்னாள் பொருளாதார மந்திரி மேக்ரன் மற்றும் தேசியவாத வலது சாரி வேட்பாளர் மாரீன் லீ பென் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பிடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.

மேக்ரனுக்கு 24,01 சதவீத ஓட்டுகளும், மாரீன் லீ பென்னுக்கு 21,30 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. பிலான் 20,01, மெலன்கோன்19,58 இருவருக்கும் 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன. ஆளும் கட்சி வேட்பாளர் ஹமோம் வெறும் 6,36 சதவீத ஓட்டுதான் பெற்றார்.

மே 7–ந் தேதி 2–வது சுற்று

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம்(மே) 7–ந் தேதி நடைபெறும் 2–வது சுற்று தேர்தலில் மேக்ரனும், லீ பென்னும் அதிபர் பதவிக்கு மோதுகின்றனர்.

2–வது சுற்றில் லீ பென்னை, மேக்ரன் எளிதாக வெற்றி கொண்டு விடுவார் என்று பிரான்ஸ் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் லீ பென் குடியேற்றத்துக்கு எதிர்ப்பானவர் தவிர, ஐரோப்பிய கொள்கைகளுக்கு எதிரான போக்கும் கொண்டவர். இதனால் தேர்தலில் தோல்வி கண்ட பழமைவாத கட்சி மற்றும் சோசலிச கட்சி வேட்பாளர்கள் மேக்ரனை வெற்றி பெற செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். எக்காரணம் கொண்டும் லீ பென் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

பங்குச் சந்தைகள் எழுச்சி

மே 7–ந் தேதி நடைபெறும் 2–வது சுற்று அதிபர் தேர்தலில் மேக்ரன் எளிதில் வெற்றி காண்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால் பிரான்சில் பங்குச் சந்தைகள் வேகமாக எழுச்சி கண்டன. கடந்த 6 மாதங்களில் பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டிருப்பது இதுவே முதல் முறை.

முதல் சுற்று முடிந்ததும், புதிதாக எடுக்கப்பட்ட கருத்துகணிப்புகள் மேக்ரன் அதிக வாக்கு சதவீத வித்தியாசத்தில் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கூறுகின்றன.

39 வயது மேக்ரனும் முதல் கட்ட தேர்தலில் தனக்கு கிடைத்த வெற்றி குறித்து மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டில் நாம் பிரான்சின் அரசியல் முகத்தை மாற்றி இருக்கிறோம். அதிபர் பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்தால் இன்னும் பல புதிய முகங்களையும், திறமையானவர்களையும் அரசியலுக்கு கொண்டு வந்து நாட்டின் மந்த நிலையை போக்குவேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

infographics