எனவே, சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ‘சுற்றுச்சூழல் மற்றும் பருவகால நிலை பற்றிய கல்வியறிவு’ என்ற கருத்துருவில் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வெங்கடேஷ் கூறியதாவது:

இந்த பூமியானது மனிதர்களுக்கும், கணக்கிடவே முடியாத உயிரினங்களுக்கும் உணவு மற்றும் உறைவிடத்தை உறுதி செய்கிறது. ஆனால் மனிதர்களாகிய நாம்தான் நல்லது செய்வோரை உடனே மறந்து விடுவோமே அப்படித்தான் பூமியையும், அதன் பாதுகாப்பையும் மறந்தே போனோம்.

அதன் பயன்களையும், அதன் பாது காப்பையும் நினைவில் நிறுத்தத்தான் இன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் மூன் றாம் விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். நாம் இயற்கைக்கு தீங்கு விளைவித்தால் இயற்கை நம்மை அழிக்க நினைக்கும். இதற்கு சுனாமி, வெள்ளம், சூறைக்காற்று, வறட்சி போன்றவற்றை உதாரணங்களாக சொல்லலாம். இன்றைய நவீன வாழ்க்கையில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கிறோம். குழந்தை களையும் மதிப்பெண் கல்வியை நோக்கியே வளர்ப்பதால் அவர்களுக்கும், இயற்கையை பற்றி பெரிய ஆர்வம், அறிவு ஏற்படவில்லை.

இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழமுடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். பூமியின் முதல் எதிரியார்? என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது மனிதன்தான். இயற்கைக்கு எதிரான எந்த ஒரு கண்டு பிடிப்புகளும் மனிதர்களுக்கு தற்காலிக தீர்வை மட்டுமே தரக் கூடி யது. மாறாக நிரந்தர பெரிய தீமைகளை பூமிக்கு அவை ஏற்படுத்துகின்றன.

பயன்பாடு, வர்த்தகப் போட்டிக்காக கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள், வளர்ச்சிகள் என்ற போர்வையில் தினமும் பூமியை காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எவையெவை மட்கக்கூடியவை? மிகவும் குறைவுதான். இந்த மட்காத பொருட்களை தூக்கி வீசும் குப்பைத் தொட்டியாக பூமியை பயன்படுத்துகிறோம். வீட்டை குப்பையில்லாமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் நாம், பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி கூட செய்வது இல்லை. வீட்டில் இருப்பது மட்டுமே குப்பையல்ல. வீட்டைப்போல் பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அதுவும் நம்முடைய குப்பைதான். அந்த குப்பைகளை அகற்றி வீட்டைப்போல் பூமியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூமியை பாதுகாக்க…

பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மட்காத பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் மறுசுழற்சிக்கோ, குப்பைக்கோ எடுத்துச் செல்ல வேண்டும். இயற்கையின் சமநிலையைக் காக்க வேண்டும். உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் அதே இடத்தில் ஒன்றுக்கும் இரண்டாக மரக்கன்றுகளை நட வேண்டும்.

முடிந்த அளவுக்கு பூமி பாதுகாப்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு குறைந்தப்பட்சம் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இயற்கை பாதுகாப்பு, மரம் வளர்ப்பை ஊக்குவிக்க எல்லோரும் முன் வர வேண்டும்.

ஒய். ஆண்டனி செல்வராஜ்