சோதனையில் சிக்கிய ரூ.5 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள்: அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை?

வருமான வரித் துறை சோதனையில் ரூ.5 கோடியே 50 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப் படுகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நாளில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

விஜயபாஸ்கரின் உதவியாளர்களில் ஒருவரான திருவல்லிக் கேணியைச் சேர்ந்த நயினார் முகம்மது என்பவர் வீட்டில் சுமார் ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. எம்எல்ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கரின் அறையில் இருந்தும், எழும்பூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்த விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களிடம் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சோதனையில் மொத்தம் ரூ.5 கோடியே 50 லட்சம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இவை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மேலும், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு கோடிக் கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதும், சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான்.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இது தொடர்பாக வருமான வரித் துறை மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய 3 அமைப்புகளையும் இந்த விசாரணையில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விரைவில் விசாரணை

கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ரூ.89 கோடி பணப் பட்டுவாடா தகவல்களை வருமான வரித் துறையினர் கொடுத்தனர். அதன் பேரில் அமலாக்கத்துறை விரைவில் விசாரணையை தொடங்க உள்ளது. அதுபோல புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை யாராவது பதுக்கி வைத்திருந்தால், அதுபற்றி விசாரணை நடத்த சிபிஐக்கு சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மீண்டும் ஆஜர்

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கடந்த 10-ம் தேதியும், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமியிடம் 12-ம் தேதியும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். இந்நிலையில், 17-ம் தேதி (நாளை) காலை மீண்டும் ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

infographics