ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை!

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.

தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன.

அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும்.

அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத்தின் பாதையைச் செதுக்க வல்லவர்கள்.

ஈக்குவடோரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், இடதுசாரித் தன்மையுடைய வேட்பாளர் லெனின் மொறினோ வெற்றிபெற்றிருக்கிறார். இவ்வெற்றியின் முக்கியத்துவம் தென்னாபிரிக்கா எங்கும் வீசுகின்ற வலதுசாரி அலையைத் தடுத்து நிறுத்தியிருப்பதோடு, இடதுசாரி ஆட்சியொன்று மீண்டும் பதவிக்கு வருவதானது நம்பிக்கை தருவதாக உள்ளது.

தென்னமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசில், நன்கறியப்பட்ட ஆர்ஜென்டீனா ஆகியவற்றில் ஏற்பட்ட வலதுசாரிச் சார்பு ஆட்சி மாற்றங்கள் ஓர் அலையை தென்னமெரிக்காவில் ஏற்படுத்தியிருந்தன.

இவ்வலையை ஈக்குவடோரின் தேர்தல் முடிவுகள் தடுத்து நிறுத்தியுள்ளமையானது குறியீட்டளவிலும் அரசியல் ரீதியிலும் முக்கியமானது.

தென்னமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குக் கரை நாடாகிய ஈக்குவடோர், வடக்கே கொலம்பியா, கிழக்கு மற்றும் தெற்கில் பெரு, மேற்கே பசுபிக் கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது.

சார்ள்ஸ் டாவின் தனது பீகிள் பயணத்தின்போது, பல்வேறு புதிய உயிரினங்களை ஆராய்வதற்கு உதவிய ‘கலாப்பகோஸ்’ தீவுகள், ஈக்குவடோருக்குச் சொந்தமானவை. இன்றும் இங்கு அழிவின் விளிம்பில் இருக்கும் அரியவகை உயிரினங்கள் பலவற்றைக் காணவியலும்.

நன்கறியப்பட்ட ‘இன்கா’ நாகரீகத்தின் இருப்பிடங்களில் ஒன்றான ஈக்குவடோர் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியக் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. 1840 இல் சுதந்திரமடைந்தபோதும், தொடர்ச்சியான அமெரிக்கச் சார்பு கைப்பொம்மை அரசுகளாலும் சர்வாதிகார ஆட்சிகளாலும் ஆளப்பட்டது.

பொருளாதார வருமானத்தின் 40 சதவீதத்தை எண்ணெயிலிருந்தும் ஏனையவை விவசாயப் உற்பத்திகளாலும் பெறப்படுகிறது. உலகில் அதிகளவிலான வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக ஈக்குவடோர் திகழ்கிறது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென் அமெரிக்காவில் வீசிய இடதுசாரி அலை உலக வரலாற்றில் முக்கியமானது. ‘இளஞ்சிவப்பு அலை’ (Pink Tide) என அறியப்பட்ட இவ்வலையின் விளைவாக, உலக அரசியலில் வழமைக்கு மாறாக சோசலிச இடதுசாரிகள் தேர்தல்கள் மூலம் பதவிக்கு வந்தார்கள்.

இது வெறுமனே, ஒரு தொழிற்சங்கச் செயற்பாட்டினாலோ அல்லது குறித்த ஒரு பிரச்சினையை முன்வைத்த இயக்கத்தினாலோ உருவானதல்ல. மாறாகப் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களாலேயே, பல தென்னமெரிக்க நாடுகளில் இடதுசாரிச் சார்பாளர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அத்தோடு, தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து நீண்டகாலத்துக்குத் தக்கவைத்துள்ளார்கள்.

கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்காவின் ஆசியுடன், சர்வாதிகார ஆட்சிகளால் தென்னமெரிக்கா நிரம்பியிருந்தது. நவகொலனித்துவமும் தாராளமயப் பொருளாதாரமும் தென்னமெரிக்க மக்களைப் பாடாய்ப் படுத்தின.

பல்தேசியக் கம்பெனிகள் அளவற்ற வளச்சுரண்டல்களை மேற்கொண்டதோடு, பல தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க அரசுகளை நேரடியாகக் கட்டுப்படுத்தியும் வந்தன.

குறிப்பாக, மத்திய அமெரிக்க நாடுகளில் வாழைத்தோட்டங்களுக்கு உடைமையான கம்பெனிகள் அந்நாடுகளை மறைமுகமாக நிர்வகித்தன. இதனாலேயே வாழைப்பழக் குடியரசு (Banana Republic) என்ற பதம் தோற்றம் பெற்றது.

இப்பின்னணியில் தென்னமெரிக்க மக்கள் பல தடைகளையும் உடைத்துத் தங்கள் வாக்குகளால் மக்கள்நல அரசாங்கங்களை நிறுவினார்கள். இது தென்னமெரிக்க வரலாற்றில் முக்கியமான திசை மாற்றமாகும்.

தென்னமெரிக்காவின் இடதுசாரி எழுச்சி முக்கியமான மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் சாத்தியமாக்கி இருக்கின்றது. இடதுசாரிச் சார்பான அரசாங்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழைக்கின்றன.

மக்கள் நலத்திட்டங்களை இணைந்து முன்னெடுக்கின்றன. 2005 இல் கியூபாவும் வெனிசுவேலாவும் இணைந்து ‘அற்புத நடவடிக்கை’ (Operation Miracle) என்ற திட்டமொன்றுக்கு உடன்பட்டன.

அதன்படி, கியூபாவுக்கு வெனிசுவேலா வழங்கும் எண்ணெய்க்கு ஈடாகக் கியூபக் கண் மருத்துவர்கள் வெனிசுவேலாவின் வறிய கண் நோயாளர்கட்கு மருத்துவம் வழங்குவர். இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்துக்கும் அதிகமானோரின் கண் பார்வைப் பிரச்சினைகள் கியூப மருத்துவர்களால் களையப்பெற்று அவர்கட்குக் கண் பார்வை மீண்டுள்ளது.

இதேபோல, இடதுசாரி நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. இவ்வரசாங்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘அல்பா’ என்னும் அமெரிக்காவுக்கு மாற்றான போலிவாரிய அமைப்பு, அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான வலுவான அமைப்பாக பிராந்திய ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் கட்டிவளர்க்க முன்னிற்கிறது. இவையனைத்தும் 2000 ஆம் ஆண்டு தொடங்கிய இளஞ்சிவப்பு அலையின் விளைவிலானவை.

ஆனால், இவ்வலை என்றென்றைக்குமானதல்ல என்பதை கடந்த பத்தாண்டுகளில் நடந்த நிலவரங்கள் விளக்குகின்றன. ஏனெனில் தென்னமெரிக்காவின் இடதுசாரி அலையைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்துள்ளது.

2009 இல் ஹொண்டூராஸில் வெற்றிகரமான ஆட்சிமாற்றமொன்றை அமெரிக்கா சதிப்புரட்சி மூலம் நடத்தியது. 2012 இல் பரகுவேயின் இடது சார்பு ஜனாதிபதி பதவி நீக்கப்பட்டார். அமெரிக்கா, தன் கொல்லைப்புறத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது.

தென்னமெரிக்காவில் கடந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட இடதுசாரி எழுச்சியின் விளைவாக வெனிசுவேலா, பொலிவியா, நிக்கராஹுவா, சிலி, பிரேசில், ஈக்குவடோடர், ஹெய்ற்றி போன்ற நாடுகள் சுய பொருளாதார மேம்பாட்டிலும் தமக்குரிய திட்டங்களை வகுத்துச் சொந்தக் கால்களில் வழிநடக்க முனைந்துள்ளன.

அமெரிக்காவின் காவல் நாய்கள் போன்று தென்னமெரிக்க நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடாத்தி வந்த பிற்போக்குக் குழுக்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்துள்ளன. இதன் விளைவால் தென்னமெரிக்கா வேகமாக மாறிவருகிறது.

தென்னமெரிக்க மக்கள் விழிப்படைந்து விட்டனர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். அதை இயலுமானதாக்கியது தென்னமெரிக்க நாடுகளில் உருவான இடதுசாரி அரசாங்கங்களாகும்.

அவை, ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி, நவதாராளவாதத்தை நிராகரிக்கின்றன. வளங்களும் சேவைகளும் தேசியமயமாக்கப்பட்டு அரசுடைமையாகின்றன. சர்வதேச நாணய நிதியம் தென்னமெரிக்காவில் தனது கோரப் பிடியை இன்று இழந்துவிட்டது. இவை இன்று நாம் காணும் முக்கிய மாற்றங்களாகும்.

2007 ஆம் ஆண்டு ஈக்குவடோர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று இடதுசாரி வேட்பாளரான ரவ்வேல் கொராயா ஆட்சிக்கு வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கொராயா சாதனைகளின் பலனையே அவரது உபஜனாதிபதியாக இருந்த லெனின் மொறினோ பெற்றிருக்கிறார். இன்று தென்னமெரிக்காவில் உள்ள மத்திய வருமான நாடுகளில் ஒன்றாக வளர்ந்திருக்கிறன.

கொராயாவின் ஆட்சிக்காலத்தில் ஒருமில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

2007 இல் 40 சதவீதமான ஈக்குவடோரியன்கள் வறுமைக்கோட்டுக்குள் இருந்தார்கள். இன்று இது 11 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. வரிகளின் மூலம் பெறப்படும் வருமானம் மூன்று மடங்காகியுள்ளது. இலவசக் கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

2008 இல் ஜனாதிபதி கொராயா, ஈக்குவடோரின் கடன்கள் மக்களுக்குப் பயன்படவில்லை என்றும் ஊழல் மிகுந்த முன்னாள் ஆட்சியாளர்களின் கைகளுக்கே அவை சென்றன என்றும் இதை அறிந்திருந்தே சர்வதேச நிதி நிறுவனங்கள் கடன்களை வழங்கியதாகவும் எனவே, சிலரது செல்வச் செழிப்புக்காகச் சாதாரண வறிய ஈக்குவடோரியன்களை அடகு வைக்க முடியாது என்று சொன்னதோடு கடன்களைத் திருப்பிச் செலுத்த மாட்டேன் என அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் பிடியிலிருந்து ஈக்குவடோரை மீட்டார்.

அவர் எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதோடு வரிச்சலுகைகளை நீக்கியதன் மூலம் ஈக்குவடோரின் உயர்குடியினர் வரி கட்டுவதை உறுதிப்படுத்தினார்.

இதன்மூலம் பெறப்பட்ட தொகையானது சமூகநலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இவ்வகையில் நீண்டகாலமாக ஈக்குவடோரில் ஆட்சியில் இருந்து வந்த உயர்குடிகளின் வில்லனாகவும் ஏழை எளிய ஈக்குவடோர் மக்களின் கதாநாயகனாகவும் கொராயா திகழ்கிறார்.

2007 ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது முதல் கொராயாவின் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா முயன்று வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சொந்தமாக இருந்த மன்டா விமானப் படைத்தளத்தை மூடியதன் மூலம் ஈக்குவடோரில் அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை இல்லாமல் செய்தார். இது அமெரிக்கா விரும்பாத ஒரு விடயம். தனது கொல்லைப்புறம் மெதுமெதுவாக தனது கட்டுப்பாட்டை இழக்கிறது என உணர்த்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

அமெரிக்காவின் ‘போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்துக்கு’ ஏதுவாக மன்டா விமானப் படைத்தளத்தை மீளத் திறக்குமாறு அமெரிக்கா இன்றுவரை ஈக்குவடோரைக் கோரி வருகிறது. இதற்குப் பதிலளித்த கொராயா “ஓரே ஒரு நிபந்தனைக்கு அமெரிக்க உடன்பட்டால் மன்டா விமானப்படைத்தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கவியலும். அமெரிக்கா மியாமியில் ஓர் ஈக்குவடோரியப் படைத்தளத்தை நிறுவ அனுமதிக்குமாயின் எம்மால் அமெரிக்காவுக்கான விமானத்தளமொன்றுக்கு அனுமதியளிக்க முடியும்”.

விக்கிலீக்ஸ் நிறுவகர் யூலியன் அசான்ஜ் சட்டவிரோதமாகக் கைதாவதற்கு அஞ்சி பிரித்தானியாவில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் தங்கியிருக்கிறார்.

அவருக்கு ஈக்குவடோர் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. அவர் தூதரகத்திலிருந்து  வெளியேறும்போது கைதுசெய்யும் பொருட்டு பொலிசார் 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஈக்குவடோர், அசான்ஜ்ஜின் அரசியல் தஞ்சத்தை இரத்து செய்து அவரை வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க நீண்டகாலமாகக் கோரி வருகிறது. நடந்துமுடிந்த ஈக்குவடோர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர்கள் தாங்கள் பதவிக்கு வந்தால் அசான்ஜ்ஜை அமெரிக்காவிடம் கையளிப்பதாகத் தெரிவித்திருந்தார்கள்.

அதேவேளை அமெரிக்க எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிரான நெடிய போராட்டங்களிலும் நீதிமன்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கும் ஈக்குவடோரியர்களுக்கு அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

1970 ஆம் ஆண்டுமுதல் ஈக்குவடோரில் எண்ணெய் எடுத்த அமெரிக்கக் கம்பெனிகள் சுற்றுச்சூழலை மாசாக்கி வாழவியலாமல் செய்துவிட்டதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பல, அமெரிக்க கம்பெனிகளை ஈக்குவடோரில் எண்ணெய் அகழ்வை ஈடுபடவில்லாமல் செய்துள்ளன.

இவையனைத்தும் அமெரிக்கா கொராயாவின் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்ததன் காரணிகள். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி கொராயாவுக்கு எதிராகச் சதிப்புரட்சியொன்று அரங்கேறியபோதும் அது வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில், இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றமொன்றை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அமெரிக்காவும் ஈக்குவடோரின் உயர்குடியும் வங்கியியலாளரான குல்லிமோ லசோவை பொது வலதுசாரி வேட்பாளராக நிறுத்தி ஆட்சிமாற்றமொன்றுக்கு முயன்றன.

இரு தடவைகள் ஜனாதிபதியாகக் கடமையாற்றியமையால் ரவ்வேல் கொராயாவால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. கொராயாவின் உப ஜனாதிபதியாக இருந்த லெனின் மொறினோ இடதுசாரிக் கூட்டணியின் வேட்பாளரானார்.

லெனின் மொறினோ 1998 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் விளைவாக நடக்கும் திறனை இழந்தார். சக்கரநாற்காலியின் துணையுடன் செயற்படும் லெனின் மொறினோ அங்கவீனர்களுக்கான ஐக்கிய நாடுகள்

தேர்தல் பிரசாரத்தின் போது வலதுசாரி ஊடகங்கள் ‘நடக்கவே இயலாதவரால் நாட்டுக்கு என்ன செய்யவியலும்’ என்ற வகையிலான கீழ்த்தரமான பிரசாரத்தில் இறங்கியதோடு, அவர் சக்கரநாற்காலியில் வலம் வரும் படங்களைச் சுவரொட்டிகளாக ஒட்டின.

இவ்விடத்தில் ஒன்றை நினைவூட்டல் பொருத்தம். இரண்டாம் உலகப் போர் காலப்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டும் சக்கரநாற்காலி பயன்படுத்துபவர். ஆனால், அவரது படங்கள் எப்போதுமே இடுப்புக்கு மேலேயே எடுக்கப்பட்டன. அவையே ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டன.

லெனின் மொறினோவின் வெற்றி தென்னமெரிக்காவில் வீசத்தொடங்கிய வலதுசாரி எதிர்ப்புரட்சி அலையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால், எதுவுமே முடிந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வலதுசாரி வேட்பாளர் லசோ தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ளதோடு தேர்தலில் குழறுபடிகள் நடந்துள்ளதாகவும் மக்களை வீதியில் இறங்கிப் போராடுமாறும் கோருகிறார்.

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையோடும் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இத்தேர்தல் முடிவுகளை மாற்ற அமெரிக்காவும் ஈக்குவடோரின் உயர்குடியும் படாதபாடு படுகின்றன. இவை சவாலான எதிர்காலத்தை லெனின் மொறினோவுக்குக் காட்டி நிற்கின்றன.   ஈக்குவடோரின் இடதுசாரித் தன்மையுடைய ஆட்சி தக்கவைக்கப்பட்மையானது தென்னமரிக்காவின் ஏனைய இடதுசாரி இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

விளாடிமிர் லெனின் ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தி 100 ஆண்டுகள் முடிவடைகின்ற நிலையில் இன்னொரு லெனினின் வருகை நிகழ்கிறது.

– தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...