அறிவோம் நம் மொழியை… ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா.. ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?

இருப்பது, இருக்கிறார், இருந்தது, இருக்கும் ஆகிய சொற்கள் ஒரு நபர், பொருள், இடம் ஆகியவற்றின் நிலையைக் குறிப்பவை. அங்கு இருப்பது பழைய வண்டி, அவர் கோவையில் இருக்கிறார், அது தலைநகராக இருந்தது, அக்கட்சி நாளை ஆளுங்கட்சியாக இருக்கும் என்பன போன்ற எடுத்துக்காட்டுகளை வைத்து, இருத்தல் என்பதன் பல்வேறு பயன்பாடுகளை உணரலாம். இரு என்பது இதன் வேர்ச் சொல் என்பதைப் பலரும் அறிந்திருப்போம்.

இதே சொல், இன்னொரு வினைச்சொல்லோடு சேரும்போது மாறுபட்ட பொருள்களை வழங்குகிறது. வந்திருக்கிறாள், பிழைத்திருக் கிறது, வசித்திருந்தான் என்றெல்லாம் சொல்லும்போது, இருத்தல் என்னும் பொருளின் எல்லையைத் தாண்டிச் செல்வதை உணரலாம். வினைமுற்று எனச் சொல்லக்கூடிய இந்தப் பயன்பாடு, முற்றுப்பெற்ற ஒரு வினையைச் சுட்டுவதற்காகப் பயன்படுகிறது.

வந்துகொண்டிருக்கிறாள், பேசிக்கொண்டிருக்கிறான், நடந்து கொண்டிருக்கிறார்கள், தூங்கிக்கொண்டிருக்கின்றன, பாடிக்கொண் டிருப்பார் என்பன போன்ற பயன்பாடுகளில் இரு என்னும் சொல் நிகழ் / கடந்த / வருங்காலத்தின் தொடர் நிகழ்வுகளைக் குறிக் கிறது. எடுத்துக்காட்டாக, பேசுகிறான் என்பது நிகழ்காலம்.. பேசிக் கொண்டிருக்கிறான் என்பது தொடர் நிகழ்காலம்.

ஆக, இரு என்னும் வேர்ச் சொல் மூன்று விதங்களில் பயன்படுவதைப் பார்க்கிறோம். ஒன்று, இருத்தல் என்னும் பொருளில். இன்னொன்று வினைமுற்று. மூன்றாவது, தொடர்ச்சியான செயல்பாடு. இதில் எந்தக் குழப்பமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், குழப்பம் இல்லாமலேயே பிழை ஏற்பட வாய்ப்புண்டு. வந்திருக்கிறாள் என்னும் சொல்லை வந்து இருக்கிறாள் என்று பிரித்து எழுதினால், அது தன் வினைமுற்றுத் தன்மையை இழந்து, இருத்தல் என்னும் பொருளைத் தரும். அவன் பணத்தைக் கொடுத்திருக்கிறான் என்பதை அவன் பணத்தைக் கொடுத்து இருக்கிறான் எனப் பிரித்து எழுதினால் என்ன ஆகிறது என்று பாருங்கள். பணத்தைக் கொடுத்திருக்கிறான் என்றால், கொடுத்தல் என்னும் பொருள் மட்டுமே உள்ளது. கொடுத்து இருக்கிறான் எனப் பிரித்தால், பணத்தைக் கொடுத்து, (அதன் காரணமாக அங்கே) இருக்கிறான் எனப் பொருள்படுகிறது.

உழுதுகொண்டிருக்கிறார்கள் என்பது தொடர் நிகழ்காலம். இதை, உழுதுகொண்டு இருக்கிறார்கள் என எழுதினால், உழுவதன் மூலம் இருக்கிறார்கள் என்னும் பொருள் மயக்கம் தோன்றக்கூடும். எனவே, இருத்தல் எனப் பொருள் தரும் இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இரு என்னும் சொல்லின் பயன்பாட்டை அது எந்தச் சொல்லுடன் ஒட்டிக்கொள்கிறதோ அந்தச் சொல்லிலிருந்து பிரிக்காமல் எழுத வேண்டும். வந்து இருந்தான் என எழுதினாலும் வந்திருந்தான் எனப் புரிந்துகொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லையே, அப்படி இருக்க இதற்கு ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும் என்னும் கேள்வி சிலருக்கு எழலாம். அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

infographics