அங்கீகாரத்துக்காக அலைபாயும் அதிமுக அணிகள்: ஆர்.கே. நகரில் மக்கள் யார் பக்கம்?

இரண்டு ஆண்டு களுக்குள் மூன்றா வது முறையா கத் தேர்தலைச் சந்திக்கும் சென்னை ராதாகிரு ஷ்ணன் நகர் தொகுதி யில், தற்போது தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியி ருக்கிறது. அ.தி.மு. கவின் இரு அணிகளும் இதனை அங்கீகாரத்துக்கான தேர்தலாகக் கருதுவதால் பெரும் பரபரப்பில் இருக்கிறது இந்தத் தொகுதி.

1977ல் தொகுதி உருவா க்கப்பட்டதிலிருந்து பதினொரு முறை தேர்தலைச் சந்திருக்குக்கும் இந்தத் தொகுதியில் அதிக தடவைகள் அ.தி.மு.கவே வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது ஏழு முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியை தன் வசம் வைத்திருந்ததது. காங்கிரஸ் இரண்டு தடவையும் தி.மு.க. இரண்டு தடவையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.
2011ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 2014ல் சொத்துக் குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், தான் மீண்டும் போட்டியிடுவதற்கு இந்தத் தொகுதியையே தேர்ந்தெடுத்தார். இதற்கு உதவியாக அப்போது இந்தத் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினமா செய்தார்.

எதிர்பார்த்ததைப் போலவே அந்தத் தேர்தலில் 88 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் ஜெயலலிதா. அதனால், 2016ஆம் ஆண்டிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு சுமார் 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் அவர்.

 

அதிமுகவில் பிளவு – இரட்டை இலை சின்னம் முடக்கம்

2016 டிசம்பரில் ஜெயலலிதா இறந்துபோக, இப்போது மீண்டும் தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. சசிகலாவின் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்த நிலையில், இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு மின் விளக்குக் கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரு தரப்புமே, இந்தத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்கும் வெற்றி, யார் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதைத் தீர்மானிக்க உதவும் என்பதால் இரு தரப்புமே இந்தத் தொகுதியில் கடும் போட்டியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

சசிகலா அணியின் சார்பில் போட்டியிடும் அந்தப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தொகுதியில் முதல் நாளிலிருந்தே கடும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் மீதும் தி.மு.க. மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். ஆளும்கட்சியாக இருப்பதால் கிடைக்கும் அனுகூலம், பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்வதன் மூலம் வெற்றியைப் பறிக்க முடியும் என்று நம்புகிறார்.

தொகுதி முழுக்க டிடிவி தினகரன் தரப்பு வாக்குகளுக்கு பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பலர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர். தொகுதியின் எல்லா நுழைவாயில்களிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் வாகனங்களை பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர்.

இருந்தபோதும், பணம் வாங்கியதாக பலரும் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

ஓ. பன்னீர்செல்வம் அணியின் சார்பாக, அந்தப் பிரிவின் அவைத் தலைவர் இ. மதுசூதனன் போட்டியிடுகிறார். மதுசூதனன், கடந்த 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறி துறை அமைச்சராக பணியாற்றியவர். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை முக்கியமாக தங்கள் பிரசாரத்தில் முன்வைக்கிறது இந்த அணி. தினகரன் அணிக்கு இணையாக தீவிரப் பிரசாரத்தில் இவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

திமுகவுக்கு வாய்ப்பு

அ.தி.மு.க. இரண்டாகப் பிரிந்து மோத ஆரம்பித்ததுமே, இந்தத் தொகுதியில் தி.மு.கவுக்கு பெரும் வாய்ப்பு இருக்கிறது என்றே கணித்தார்கள். ஆனால், மருது கணேஷ் என்ற புதுமுகத்தை தி.மு.க. வேட்பாளராக அறிவித்தது பலரது புருவங்களை உயர்த்தியது. இருந்தபோதும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர், தொகுதியின் பிரச்சனைகளை நன்றாக அறிந்தவர் என்ற பலத்துடன் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் மருது கணேஷ்.

“தி.மு.க. இந்த இடைத் தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதெல்லாம் ஊடகங்களின் பொய்ப்பிரசாரம். எல்லாக் கட்சிகளையும்விட தீவிர பிரசாரத்தில் இருப்பது நாங்கள்தான்” என்று பிபிசியிடம் கூறினார் மருது கணேஷ்.

பாஜகாவின் வியூகம்

இதற்கு நடுவில், தொகுதியைக் குறிவைத்துத் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது பாரதீய ஜனதாக் கட்சி. இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனை வேட்பாளராக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி, கிட்டத்தட்ட 3,000 பேரைக் களமிறக்கி பணியாற்றி வருகிறது.

“நான் பனிரெண்டாம் வகுப்புப் படித்தபோது தொகுதி எப்படியிருந்ததோ, அதேபோலத்தான் இப்போதும் இருக்கிறது. முதலமைச்சரின் தொகுதி என்கிறார்கள். அதற்கான சாயலாவது இருக்கிறதா” என்று கேள்வியெழுப்புகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

இந்தத் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றிபெறுமானால், பிரதமரின் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும் என்கிறார் தமிழிசை. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இணையாக இந்தக் கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் இருக்கிறார் என்றாலும் பிரசாரத்தில் பெரிய பரபரப்பில், வெயில் இல்லாத நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் தீபாவைப் பார்க்க பெரிய அளவில் கூட்டம் கூடினாலும், அது அவருக்கு வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். இருந்தபோதும், அவ்வப்போது மாலை நேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் அவர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமது வேட்பாளராக அந்தப் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரை களமிறக்கியிருக்கிறது. தொகுதியின் பிரச்சனைகளை முன்வைத்தும் சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தால்தான் மக்களின் பிரச்சனைகளைப் பேசமுடியும் என்றுகூறியும் வாக்கு சேகரித்துவருகிறது சி.பி.எம்.

இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றனர். சுயேச்சைகள் உட்பட தற்போது ஒட்டுமொத்தமாக 62 பேர் களத்தில் இருக்கின்றனர்.

ஆர்.கே. நகர் பிரச்சனைகள்

சுமார் 2,55,000 வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதி சென்னையின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. சென்னையின் மிகப் பழைய பகுதியான இப்பகுதியில் குறுகிய சாலைகளும் சிறு சிறு சந்துகளும் அதிகம். தீராத குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல், ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு என பிரச்சனைகளுக்குப் பஞ்சமே இல்லாத தொகுதி இது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிறகு குடிநீர் பிரச்சனை ஒரளவுக்குச் சரிசெய்யப்பட்டிருக்கிறது. குப்பைகள் ஒழுங்காக அள்ளப்படுகின்றன. ஆனாலும், இன்னும் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

இந்தத் தொகுதியில் ஒரு கலைக் கல்லூரியும் பாலிடெக்னிக்கும் கட்டப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்தார் ஜெயலலிதா. சொன்னபடி கலைக்கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் அந்தக் கட்டடம் திறக்கப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதும் அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இரண்டு பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி நடந்துவருகிறது.

“இந்தக் கல்லூரிக் கட்டடம் சீக்கிரம் திறக்கப்பட வேண்டும். ஒரு ஆரம்பப்பள்ளிக்கூடத்தில் கல்லூரி வகுப்புகளை நடத்தினால் அது நன்றாகவா இருக்கும். இந்த ஆண்டு சேர்க்கை இருக்குமா என்பதும் தெரியவில்லை” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த ஜாஃபர்.

இதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த ராதாகிருஷ்ணன் நகரிலும் நூலகங்கள், வங்கிக் கிளைகள் குறைவு என்ற குறையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

ராதாகிருஷ்ணன் நகரின் மிக முக்கியமான பிரச்சனை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு. வட சென்னையின் குப்பைகள் அனைத்தும் கொட்டப்படும் இடம். இதனால், இதைச் சுற்றி வசிக்கும் மக்கள் அனைவரும் கொசுத்தொல்லை, நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது, காற்றில் எப்போதும் பரவியிருக்கும் துர்நாற்றம் ஆகியவற்றால் எப்போதும் அவதிப்பட்டுவருகின்றனர்.

தற்போது இந்த குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுவிட்டாலும், ஒருங்கிணைந்த குப்பை மேலாண்மை அவசியம் என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.

இந்தத் தொகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள். ஆகவே ரேஷன் கடைகள் சரியாக இயங்குவது மிக அவசியம் என்கிறார்கள் இப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள்.

இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

தொகுதியில் வாக்குகளுக்குப் பணம் வழங்குவதாகப் புகார்கள் எழுந்திருப்பதால், தேர்தல் ஒத்திவைக்கப்படுமோ என்ற அச்சமும் சில கட்சியினரிடம் காணப்படுகிறது. “மற்ற கட்சியினரைப் போல நாங்கள் பணத்தைச் செலவழிக்காவிட்டாலும் பெரும் மனித உழைப்பை அளித்திருக்கிறோம். அதனால், தேர்தல் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது என்றே விரும்புகிறோம்” என்கிறார் தமிழிசை.

ஆனால், ஏப்ரல் ஏழாம் தேதி மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்தவருமான விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியிருக்கிறது. அந்தத் தொகுதி முழுவதுமே அதிகாரிகள், காவல்துறையினர் தேர்தலை ஒட்டி மாற்றப்பட்டுள்ளனர். இருந்தபோதும் வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் பணம் வழங்கப்பட்டுவருவது குறித்த புகார்கள் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. பல இடங்களில் இது தொடர்பான மோதல்களும் நிகழ்ந்திருக்கின்றன. இதன் காரணமாக இடைத்தேர்தலை ஆணையம் ஒத்திவைக்கக்கூடுமோ என்ற அச்சம் எல்லா கட்சியினரிடமும் காணப்படுகிறது.

டிடிவி தினகரனுக்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. அ.தி.மு.கவின் வாக்குகள் பிரிந்துகிடப்பதால் எளிதில் வெல்லலாம் என நம்புகிறது தி.மு.க.

தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், தொகுதியில் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...