அறிவோம் நம் மொழியை: புள்ளியும் காற்புள்ளியும் எதற்காக?

டாக்டர் முதலான சொற்களைத் தமிழில் எழுதும்போது, சிலர் டாக்டர். கரிகாலன் என எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் Dr. என எழுதப்படுவதன் விளைவாக இந்தப் பழக்கம் வந்திருக்கக்கூடும். ஆங்கிலத்தில் Doctor என்பதன் சுருக்கமாக Dr என எழுதும்போது அதில் புள்ளி வைப்பதுண்டு. Doctor என முழுமையாக எழுதும்போது வைப்பதில்லை. Dr என்பது முழுமையான சொல் அல்ல, அதன் சுருக்கம் என்பதைத் தெரிவிப்பதற்கான அடையாளம் இது. Jr., Sr., Mr. போன்ற பல சுருக்கங்களுக்கும் இப்படிப் புள்ளியிடுவதுண்டு. தமிழில் நாம் டாக்டர், மிஸ்டர், ஜூனியர் என முழுமையாக எழுதிவிடுகிறோம். webpages.ca, இங்கெல்லாம் புள்ளி தேவையில்லை.

பொதுவாகவே, தேவை இருந்தாலொழிய நிறுத்தற்குறிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். சிலர், நீண்ட வாக்கியங்கள் எழுதும்போது எக்கச்சக்கமான காற்புள்ளிகளைப் (,) போட்டுவிடுவார்கள். தொடர்ந்து படிக்கையில் புரிந்துகொள்வதற்குக் குழப்பம் ஏற்படும் என்றால், அங்கே நிறுத்திப் படிப்பதற்குக் காற்புள்ளியைப் பயன்படுத்தலாம். பட்டியல் போடும்போது பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்.

‘அவன் திரும்பி வரும்போது அந்தப் படம் அங்கேயே இருந்தததைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தான்’ என்னும் வாக்கியம் சற்றே நீளமாக இருந்தாலும், நிறுத்தற்குறிகளின் தேவை இல்லாமலேயே புரிகிறது. இங்கே எதற்காகக் காற்புள்ளி? வாக்கியங்களை முறையாகக் கட்டமைத்தால் அதிக நிறுத்தற்குறிகள் தேவைப்படாது.

*

இப்போதெல்லாம் சிலர், ஞாபகம் என்பதை நியாபகம் என்று எழுதத் தலைப்படுகிறார்கள். வடமொழியில் இந்தச் சொல்லை ஞாபகம் என்று சொல்லிவிட முடியாது. (க்) ஞாபகம் என்பதாக அதன் உச்சரிப்பு இருக்கும். இந்த (க்)ஞா என்னும் எழுத்து, தமிழில் பெரும்பாலும் ஞா என்பதாகவே வழங்கப்பட்டுவருகிறது. நியாயம் என்பது போன்ற ஒரு சில சொற்களில் மட்டுமே நியா என்னும் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றபடி பெரும்பாலும் ஞா என்னும் எழுத்தே பயன்படுத்தப்படுகிறது.

எந்த இடத்தில் நியா, எந்த இடத்தில் ஞா என்ற குழப்பம் வரக்கூடும். பெரும்பாலான இடங்களில் ஞா என்னும் சொல்லே பயன்படுத்தப்படும் வழக்கம் இருப்பதால், ஞா என்பதையே பொது வழக்காக வைத்துக்கொள்ளலாம். ஞாபகம் என்று நிலைபெற்றுவிட்ட சொற்களை மாற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

* சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முஹம்மது கான் பாகவி என்னும் வாசகர் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். “அனுப்புகிறான் என்பது நிகழ்காலம். இதை அனுப்புகின்றான் என எழுதினால் அது தொடர் நிகழ்காலத்தைக் குறிக்கிறதா?” எனக் கேட்கிறார். இரண்டுமே நிகழ்காலம் மட்டுமே. தொடர் நிகழ்காலம் அல்ல. கிறான், கின்றான் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, ‘கின்றான்’ என்பது சற்றே புலமைசார் வழக்கு. அனுப்பிக்கொண்டிருக்கிறான் என எழுதினால்தான் அது தொடர் நிகழ்காலம். அனுப்பிக்கொண்டிருக்கிறான் என்னும் உதாரணத்தில் வரும் இருக்கிறான் என்னும் சொல்லைக் குறித்த சில சங்கதிகளை அடுத்த வாரம் பார்க்கலாம்.

– அரவிந்தன்,

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...