இலங்கையில் மன அழுத்த நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்ன?

இலங்கையில் மனஅழுத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு உலக சுகாதார தினம், ஏப்ரல் 7ம் தேதி ”மன அழுத்தம் பற்றி பேசுவோம்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட இருக்கும் வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ஜேக்கப் குமரேசன் இலங்கையில் 8 லட்சம் பேர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக கூறியிருக்கின்றார்.

“இலங்கையில் 100 பேரில் 8 பேர் மன அழுத்த நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 40 சதவீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர். ஏனையோர் அறியாமை காரணமாக சிகிச்சை பெறுவதில்லை” என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தனிநபரொருவரின் உடல நல குறைவு மற்றும் இயலாமைக்கு மன அழுத்தம் பிரதான காரணமாக அமைவதாகவும், ஆதரவு இல்லாமை மற்றும் மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுப்பதற்கு பயம் போன்றவை இதற்கு சிகிச்சை பெற தடையாக இருப்பதாக உளநல மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

“2020ம் ஆண்டு காலப்பகுதியில் ஆற்றல் கேடு, உறுப்புகள் செயலிழத்தல் போன்றவற்றிற்கு பிரதான காரணியாக மன அழுத்தம் அமையும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“மன அழுத்தத்திற்குள்ளான ஒருவர் தனது பிரச்சினை பற்றி பேசுவதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் நம்பிக்கைக்குரிய ஒருவரை தேடி கண்டுபிடிப்பது இன்றைய இயந்திரமயமான உலகில் மிக கடினமாக காணப்படுகின்றது இது ஒரு பிரதான காரணி” என பிபிசி தமிழோசையுடன் இது பற்றி பேசிய மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் ரி.கடம்பநாதன் தெரிவித்தார்.

உலகில் 300 மில்லியன் மக்கள் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2005 – 2015 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 18 சதவீத அதிகரிப்பை இது காட்டுவதாகவும் உலக சுகாதார தினம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.

“இந்த புதிய தரவுகள் மன அழுத்தம் தொடர்பாக சகல நாடுகளையும் தட்டியெழுப்பும் ஓர் அழைப்பு” என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...