இரட்டைமடியையும் சுருக்குமடியையும் ஒன்றெனக் கருதுவது அறியாமை இல்லையா?

ராமேஸ்வரத்தில் அரசு சார்பில் தண்டோரா போட்டிருக்கிறார்கள். “கடலுக்குப் போகும் படகுகள் கண்டிப்பாய் மீன் துறையிலிருந்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். இந்திய எல்லையைத் தாண்டி போகக் கூடாது. இரட்டைமடி / சுருக்குமடி பயன்படுத்தக் கூடாது.’’ இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கடல் தொழில் தொடர்பாக எதுவுமே தெரியாதவர்களை வைத்து இந்த அரசாங்கம் மீனளத் துறையை நடத்தும். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவர்கள் தம் அறியாமையால் கடலோடிகளை வதைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.

மீனளத் துறையிலிருந்து அனுமதிச் சீட்டு பெற்றுத்தான் கடலுக்குப் போக வேண்டும் என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் சட்டம். இச்சட்டத்தால் கடலோடிகளைக் காட்டிலும் பயனடைபவர்கள் அதிகாரிகள்தான். சும்மாவா, ராமேஸ்வரம் பகுதியில் உதவி மீனளத் துறை அதிகாரிகள் பதவிக்கு இத்தனை போட்டி நிலவுகிறது? ஒரு இழுவை மடியை அனுமதிப்பதற்கு ரூ.2,000 லஞ்சம் என்கிறார்கள் படகோட்டிகள். ஆக, 100 இழுவை மடிகள் அனுமதிக்கப்பட்டால் ஒரு கடல் தொழிலுக்கு ரூ.2 லட்சம். வாரத்தில் மூன்று நாட்கள் தொழிலென்றால், ரூ.6 லட்சம். மாதத்துக்கு ரூ.24 லட்சம். வருஷத்துக்கு ரூ.2.5 கோடி. அரசாங்கம் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடல் வளம் தானாகவா அழிபடுகிறது?

எல்லை தாண்டி போகக் கூடாது என்கிற விதிமுறை விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது. இழுவைமடியும், கொள்ளிமடியும் (இரட்டை இழுவைமடி) கூடாது என்கிறார்கள் பாருங்கள், அது அறியாமை – சதி. அதாவது, சுருக்குமடியையும், இழுவைமடியையும் ஒரேவகையான தொழில் முறைபோல் பார்க்க வைப்பது ஒருபுறம் அதிகாரிகளின் அறியாமை; மறுபுறம் இழுவைமடி சுரண்டல்காரர்களின் தந்திரம். பாரம்பரிய மீன்பிடி முறையான சுருக்குமடியையும், கடல்வளத்தைப் பாழ்படுத்தும் இரட்டை இழுவைமடியையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது பெரும் தவறு.

தமிழகக் கடல் சூழல் எப்படி?

தமிழகத்தின் தென்கடலில் வாடைக் காற்றுக் காலங்களில் மட்டுமே நடக்கும் இந்தச் சுருக்குமடித் தொழில் என்பது கடலில் மீன்வேட்டத்தின் சவால் நிறைந்த தொழில். காற்றையும் கடலையும் அதன் பல்வேறு நீரோட்டங்களையும் அறிந்த பாரம்பரிய மீனவரன்றி, சாதாரண தொழில்முறை மீனவராலோ, வணிக மீனவராலோ எக்காலத்திலும் செய்ய முடியாத தொழில். வள்ளத்துக்கு ஆறு நபர்களோ, எட்டு நபர்களோ சேர்ந்து, இரண்டு வள்ளங்கள் இணைந்து செய்யும் கூட்டுத்தொழில் இது.

வாணிவாடும், வாடைக் காற்றும் இருக்கும் காலங்களிலேயே பரந்த கடலில் இடம்பெயரும் இந்த மீன் கூட்டம் கரையிறங்கும். கரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து கடல் மைல் களுக்கு உள்ளாகவே பாரம்பரிய மீன்பிடிக் கடற்பரப்பிலேயே நடக்கும் இந்தத் தொழில், காற்றுமாறி சோழக் காற்றும், சோணிவாடு நீரோட்டமும் வந்தால் இல்லாமலாகிவிடும். மீன்கள் ஆழ்கடல் நோக்கிப் போய்விடும்.

கடலில் மாப்பு (மீன் கூட்டம்) வருவதைக் கரையிலிருந்து பார்த்த பிறகுதான், வள்ளங்களை இறக்கி மடி வளைத்து மீன் பிடிப்பார்கள். நெத்திலிக்கு சாளை இணை மீன், ஒன்றை ஒன்று சாப்பிடுவதில்லை. ஆனால், இவற்றுக்குப் பாறையும், சூரையும், கெழுதும் துணைமீன்கள். கூட்டம் கூட்டமாய்ச் சாயும் சாளையையும், நெத்திலியையும் சாப்பிடுவதற்காகவே அவற்றின் பின்னாலேயே துணை மீன்கள் வரும்.

சுருக்குமடித் தொழில் என்பது மேலெழும்பி வரும் மீன்களை விரட்டிப் பிடிக்கும் பாரம்பரியத் தொழில்நுட்பம். எந்த விதத்திலும் கடல்வளத்தைப் பாதிக்காத தொழில்முறை இது. அந்தக் காலத்தில் கடற்கரை ஊர்களில் நடைமுறையில் இருந்த குத்துவலை அல்லது கரைமடி என்பதன் அடுத்த கட்டம்.

ஏன் சுருக்குமடியைக் குறிவைக்கிறார்கள்?

சுருக்குமடியில் நீரோட்டம் சார்ந்து, மீன்சாய்வு சார்ந்து லட்சக் கணக்கில் மீன்பாடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதான் பிரச்சினை! அடுத்தவரின் வெற்றியைத் தாங்க முடியாது என்ற தொழில் போட்டிக் குணம் இங்கே குறுக்கே நிற்கிறது. இந்தத் தொழில்முறைக்கு எதிராய் பாரம்பரிய சிறு மீனவர்களையும் சிலர் தூண்டிவிடுகிறார்கள். இவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும், இந்த மீன்கள் இங்கு பிடிபடாவிட்டால் பரந்த கடலில் வேறு எங்கோ போய்விடும் அல்லது இறந்து பயனற்றுப் போய்விடும்.

கடல் வளம் சார்ந்த தற்போதைய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகள், இந்திய தீபகற்பத்தில் குறைந்தது வருடத்துக்கு 1,80,000 டன்கள் அழியக்கூடிய மீன்வளம் இருப்பதாகத் தெரிவிக் கின்றன. இவை நமது மீனவர்களுக்குக் கிடைத்தே ஆக வேண்டும். இதற்கான வழிமுறைகள் என்ன என்பது கண்டெறியப்பட வேண்டும். அதை விடுத்து, புரிதலே இல்லாமல் பாரம்பரிய மீனவரின் அடுத்தகட்டமான சுருக்குமடி தொழில்நுட்பத்தை இல்லாமலாக்க நமது மீன்துறை முயல்வதில் எள்ளளவும் நியாயம் இல்லை.

கடல் தாயின் எதிரிகள் யார்?

உண்மையில், கடல் தொழிலைச் செய்யவிடாமல் தடுப்பவர்கள் இழுவைமடி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கடல் வளத்தை இல்லாமலே ஆக்கும் விசைப் படகு மீனவர்களும், இரட்டை இழுவைமடியான கொள்ளிமடி அடிக்கும் வணிக மீனவர்களுமே.

மீன்பிடிப்பு எல்லைகள், மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு வரையறுக்கப்பட்ட நிலையிலும், மீன்பிடிக் கப்பல்கள், விசைப் படகுத் தொழில் பகுதிக்குள் வருவதும், விசைப் படகுகள் பாரம்பரிய மீனவர் பகுதியில் நுழைவதும் கடற்பரப்பில் நாள்தோறும் நடந்தேறும் நிகழ்வு. கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன மத்திய – மாநில அரசுகள். இழுவைமடி மீன்பிடிப்பு தவறு என்பது தெரிந்தும் அந்தப் படுபாதகச் செயலைக் கண்டுகொள்ளாமல் விடுவது யார் குற்றம்? அதற்குப் பின்னுள்ள லஞ்ச அரசியலை யார் தடுப்பது?

இந்தப் பிரச்சினைக்கு இன்னும் ஒரு நல்ல முடிவு வராமல் இருப்பதற்கு ராமேஸ்வரத்தின் பல போலி மீனவத் தலைவர்களும் இன்னொரு காரணம்.

புரிதல் வேண்டும் கடலோடிகளுக்கும்!

பல தலைமுறைக்கான அட்சய பாத்திரம் தமிழகக் கடற்பரப்பில் உள்ள பாக். ஜலசந்தி. “இரட்டைமடித் தொழில் உள்ளிட்ட சுரண்டல் பாணி மீன்பிடித் தொழில்வழி கிடைக்கும் வருமானம் ஒரு மாயை. அது கடல்வளத்தையும் அடியோடு அழித்துவிடுகிறது” என்ற எண்ணம் நமது கடலோடி இளைஞர்களுக்கும் வர வேண்டும். பாரம்பரியக் கடல் மேலாண்மை அறிவுடன் நவீனத் தொழில்நுட்பத்தை வரித்துக்கொண்ட காலத்துக்கேற்ற மீன்பிடிப் பயிற்சியையும் சாதனங் களையும் நம் கடலோடிகளுக்கு எப்படி வழங்கு வது, அதற்கான திட்டங்களை எப்படித் தீட்டுவது கடலோடி சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்தே ஆலோசனை கலந்து, தமிழக அரசு ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்ட வேண்டும். கடலோடிகள் உயிர் பறிபோகும்போது மட்டும் அவர்கள் நலம் தொடர்பில் பேசாமல், நாட்டின் கடல் எல்லைப் பாதுகாப்பிலும் இணைந்து செய லாற்றும் கடலோடிச் சமூகத்தின் பாதுகாப்பைப் பொதுச் சமூகம் எப்போதும் நினைத்திருக்க வேண்டும்.

ஜோ டி குரூஸ், எழுத்தாளர், ‘ஆழி சூழ் உலகு’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர், தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...