நெதர்லாந்து தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படும் உண்மைகள் !

ஐரோப்பா முழுவதும் வெகுஜன ஈர்ப்பு அலை பரவும் என்று எழுந்த கணிப்பைப் பொய்யாக்கியிருக்கின்றன நெதர்லாந்து தேர்தல் முடிவுகள். பிரதமர் மார்க் ருட்டேயின் மைய வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சி’(விவிடி) 33 இடங்களில் வென்றிருப்பதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான, முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை கொண்ட, அகதிகள் வருகையை எதிர்க்கின்ற கீர்ட் வைல்டர்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரத்துக்கான கட்சி’க்கு(பிவிவி) 20 இடங்கள் கிடைத்திருக்கின்றன. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்தின் கீழ் சபைக்கு, 28 கட்சிகள் போட்டியிட்டிருக்கும் நிலையில், கூட்டணி அரசு அமைவது தவிர்க்க முடியாததாகி இருக்கிறது.

பிரதமர் மார்க் ருட்டேயின் துணிச்சலான நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றே இது பார்க்கப்படுகிறது. துருக்கி அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசியல் சட்டச் சீர்திருத்தத்துக்கு நெதர்லாந்தில் வசிக்கும் துருக்கியர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக, அதிபர் தயீப் எர்டோகனின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அவர் கடுமையாக எதிர்த்தார். அதேசமயம், எர்டோகனுக்கு ஆதரவு திரட்டும் கூட்டங்களில் கலந்துகொள்ள துருக்கி அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, துருக்கி வம்சாவளியினருக்கும் போலீஸாருக்கும் இடையில் ராட்டர்டாம் நகரில் நடந்த மோதல்கள் கீர்ட் வைல்டர்ஸுக்கே சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடக்கவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்ற ‘டி-66’ மற்றும் ‘க்ரீன்லெஃப்ட்’ போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுஜன ஈர்ப்பு அரசியலை எதிர்க்கும் அக்கட்சிகள் சகிப்புத்தன்மை, கருணையை வலியுறுத்துபவை. கடந்த தேர்தலில் 38 இடங்களில் வென்றிருந்த தொழிலாளர் கட்சியான ‘பிவிடிஏ’ கட்சிக்கு இந்த முறை கிடைத்திருப்பது எட்டு இடங்கள்தான். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், குறைந்தபட்சம் தற்சமயத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இது சற்றே உற்சாகம் அளித்திருக்கிறது என்று சொல்லலாம். மார்க் ருட்டேயின் முதல் பணி ஆட்சி அமைப்பதற்கான கூட்டணியை உருவாக்கிக்கொள்வதுதான். பிற மைய வலதுசாரிக் கட்சிகளுடன் அக்கட்சி கூட்டணி அமைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.

ஐரோப்பாவில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் இயங்க வேண்டிய நிலையில்தான் நெதர்லாந்தின் புதிய அரசு இருக்கிறது. அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, அம்மக்களை மரியாதையாகவும், அரவணைப்போடும் அணுகுவது போன்ற நடவடிக்கைகளையும், அம்மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியிருக்கிறது. குடியேறிகளுக்கு சமூகப் பணிகள் வழங்குவதுடன், இஸ்லாம் எதிர்ப்புணர்வும், சிறுபான்மையினரைப் பலிகடா ஆக்கும் செயற்பாடுகளும் அற்ற டச்சு விழுமியங்களைப் பாதுகாப்பதும் புதிய அரசின் கடமை. இந்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தீவிர வலதுசாரிக் கட்சிகள் பெறும் வெற்றி தோல்விகள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நெதர்லாந்தின் தேர்தல் முடிவு சற்றே ஆறுதலைத் தருகிறது!

Leave a Reply

Your email address will not be published.

x

Check Also

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி !

இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி ...